- ஆந்திர தேர்தல்
- சந்திரபாபு
- ஜகன் மோகன்
- பாரதிய ஜனதா
- காங்கிரஸ்
- ஷர்மிளா காட்டம்
- திருமலா
- ஆந்திரா காங்கிரஸ்
- ஜனாதிபதி
- ஷர்மிளா
- தில்லி
- பாஜக
- ஆந்திரா
திருமலை: டெல்லி சென்று பாஜக மேலிடத்தை சந்திப்பதில் சந்திரபாபுவும், ஜெகன்மோகனும் போட்டிப்போடுவதாக ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ஷர்மிளா விமர்சித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் விரைவில் 175 சட்டமன்ற தொகுதிக்கும், 25 மக்களவை தொகுதிக்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. நடிகர் பவன்கல்யாணின் ஜனசேனா கட்சி பாஜகவுடன் கூட்டணியில் உள்ளது. தெலுங்கு தேசம் கட்சியும் பாஜவுடன் கூட்டணி வைக்க உள்ளது.
அதற்காக நேற்று முன்தினம் நள்ளிரவு டெல்லி சென்ற சந்திரபாபு, அமித்ஷா மற்றும் ஜே.பி. நட்டாவை சந்தித்து பேசினார். அப்போது மக்களவை தொகுதியில் 6 இடங்களும், சட்டமன்ற தொகுதிகளில் 10 முதல் 12 இடங்களை பாஜகவுக்கு ஒதுக்க சந்திரபாபு சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே இன்று காலை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன், அவசர அவசரமாக டெல்லி புறப்பட்டுள்ளார். மாநில உரிமைகள் மற்றும் நிதி பங்களிப்பு தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க செல்வதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ஆந்திர அரசியல் நிலை குறித்தும், சில தகவல்கள் தெரிவிக்கவும், சந்திரபாபுவை பாஜக கூட்டணியில் சேர்க்கவேண்டாம் என வலியுறுத்தவும் அவர் டெல்லி சென்றிருப்பதாக கூறப்படுகிறது. ஆந்திராவில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் பாஜ மேலிடத்தை போட்டிப்போட்டு சந்தித்து வரும் சூழல் உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் மாநில தலைவரும், ஜெகன்மோகனின் தங்கையுமான ஷர்மிளா, ஏலூர் மாவட்டம் தொண்டலூரில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:
முதல்வராக இருந்து ஜெகன்மோகன் கடந்த 5 ஆண்டுகளில் சாதித்தது என்ன? பாஜகவுக்கு எதிராக அவர் ஒருநாள் கூட வாய் திறந்ததில்லை. ஆந்திர சட்டமன்ற கூட்டத்தில் மத்திய அரசுடன் நல்லுறவு இருப்பதாக முதல்வர் ஜெகன்மோகன் பேசுகிறார். அப்படியிருக்கும்போது மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை கேட்டு பெறாமல் உள்ளது ஏன்? பாஜவுடன் ஜெகன்மோகன், சந்திரபாபு ஆகியோர் போட்டிப்போட்டு நட்பு பாராட்டுகின்றனர். பாஜவை திட்டி ஒருநாள் கூட சந்திரபாபு பேசியதில்லை. அமித்ஷா அழைத்த உடனே டெல்லிக்கு ஓட்டம் பிடிக்கிறார்.
சிறப்பு அந்தஸ்து கொடுத்தால் கூட்டணி வைப்பேன் என சவால் விடும் தைரியம் இல்லாதவர் சந்திரபாபு.அவர் ஆந்திர மாநில பாஜக தொண்டராகவே மாறிவிட்டார். ஒன்றிய அரசின் நடவடிக்கைகளால் மாநில மக்கள் பாதிக்கப்படுவது குறித்து இவர்களுக்கு அக்கறை இல்லை. இருவரும் பாஜவின் கைக்கூலியாக மாறிவிட்டனர். டெல்லிக்கு சந்திரபாபு சென்றார். அவரை தொடர்ந்து ஜெகன்மோகன் செல்கிறார். ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் பாஜகவின் அடிமையாகவே மாறிவிட்டது. இவ்வாறு அவர் பேசினார்.
The post சூடு பிடிக்கிறது ஆந்திர தேர்தல் சந்திரபாபு-ஜெகன்மோகன் இருவரும் பாரதிய ஜனதாவின் கைக்கூலிகள்: காங்கிரஸ் தலைவர் ஷர்மிளா காட்டம் appeared first on Dinakaran.