×

காங்கிரசில் சீட் மறுக்கப்பட்டதால் பாஜவில் இணைந்தார் ரவி ராஜா

மும்பை: மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் சயோன் கோலிவாடா தொகுதியில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டதால் அதிருப்தியடைந்த காங்கிரஸ் பிரமுகர் ரவி ராஜா, நேற்று அக்கட்சியில் இருந்து விலகி தேவேந்திர பட்நவிஸ், ஆஷிஷ் ஷெலார், சயான் கோலிவாடாவின் தற்போதைய எம்எல்ஏ கேப்டன் தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலையில் பாஜவில் சேர்ந்தார். மும்பை மாநகராட்சியின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், நகர காங்கிரஸ் மூத்த தலைவருமாக இருந்தவர் ரவி ராஜா. காங்கிரசுடனான 44 ஆண்டுகால உறவை முறித்துக் கொண்டு பாஜவில் இணைந்ததாகவும், தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார். தகுதி அடிப்படையில் தேர்தலில் சீட் வழங்க வேண்டும், அதை காங்கிரஸ் செய்யவில்லை.

பாகுபாடு காட்டி வருகிறது. கட்சிக்கு நான் செய்த 44 ஆண்டு சேவை அங்கீகரிக்கப்படவில்லை எனவும் ரவி ராஜா கூறினார். பாஜவில் இணைந்த நிகழ்வில் பேசிய ஷெலார், ‘‘ராஜா மும்பையில் உள்ள பிரச்னைகள் அறிந்த கலைக்களஞ்சியம் போன்றவர். அவர் எங்கள் பழைய நண்பர். ராஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் பாஜகவில் சேர முடிவு செய்திருப்பது, தேர்தலில் பாஜவை வலுப்படுத்துவதாக அமையும்’’ என்றார். 5 முறை மும்பை மாநகராட்சி கவுன்சிலராகவும் மும்பை மாநகராட்சியில் காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தவர் ரவிராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

The post காங்கிரசில் சீட் மறுக்கப்பட்டதால் பாஜவில் இணைந்தார் ரவி ராஜா appeared first on Dinakaran.

Tags : Ravi Raja ,Bajaj ,Congress ,MUMBAI ,SAION KOLIWADA ,MAHARASHTRA ,AKKADASI ,DEVENDRA PATNAVIS ,ASHISH SHELAR ,SAYAN KOLIVAIS Tamitselvan ,MLA ,Dinakaran ,
× RELATED மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜ கூட்டணி...