ரூ.2 கோடி கேட்டு மிரட்டிய வழக்கு மாணவனை கடத்திய மாஜி போலீஸ்காரர் கைது: மேலும் 4 பேருக்கு வலை

மதுரை: பள்ளி மாணவனை கடத்திய வழக்கில், முன்னாள் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை, எஸ்எஸ் காலனியை சேர்ந்தவர் மைதிலி ராஜலெட்சுமி(40). சமீபத்தில், கணவர் இறந்து விட்டார். இவருக்கு பைபாஸ் சாலை பகுதியில் காம்ப்ளக்ஸ் மற்றும் வீடுகள் உள்ளன. இவரது மகன் தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து படித்து வருகிறார். ஆட்டோவில் பள்ளிக்கு சென்று, மாலை அதே ஆட்டோவிலேயே வீடு திரும்புவார்.

நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு ஆட்டோவில் சென்ற மாணவனை, ஆட்டோ ஓட்டுனருடன் சேர்த்து, கத்தியை காட்டி ஒரு கும்பல் கடத்தி ரூ.2 கோடி கேட்டும் மிரட்டல் விடுத்தது. எஸ்.எஸ்.காலனி போலீசார், கடத்தல்காரர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தினர். போலீசார் நெருங்கியதை அறிந்த கடத்தல்காரர்கள், செக்கானூரணி அடுத்த கிண்ணிமங்கலத்தில் சிறுவனையும், ஆட்டோ டிரைவரையும் விட்டு விட்டு தப்பிச் சென்றனர்.

தொடர்ந்து, மீட்கப்பட்ட சிறுவன், ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரித்ததுடன், சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசார் கைப்பற்றி கடத்தலில் ஈடுபட்டவர்களை தேடினர். அதில், எல்லீஸ் நகரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரை, தேனி மாவட்டம், போடியில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்தில் காவல்துறையில் பணிபுரிந்து குற்ற வழக்கு காரணமாக, பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் எனத் தெரிந்தது. கும்பலை சேர்ந்த மேலும் 4 பேரை போலீசார் தேடி வந்தனர்.

விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது, ‘‘கடத்தப்பட்ட மாணவனின் தாயார் மைதிலி ராஜலெட்சுமி சமீபத்தில், எஸ்எஸ் காலனியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம், வணிக வளாகத்தை விலைக்கு வாங்கியதில், கொடுக்கல், வாங்கல் தகராறு இருந்துள்ளது.  இதுதொடர்பாக ஏற்பட்ட மோதலில், பெண் தூண்டுதலின்பேரில் தூத்துக்குடியைச் சேர்ந்த ரவுடி ஒருவர் மாணவனை, கூட்டாளிகளுடன் சேர்ந்து கடத்தியுள்ளார். கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன’’ என்றார்.

The post ரூ.2 கோடி கேட்டு மிரட்டிய வழக்கு மாணவனை கடத்திய மாஜி போலீஸ்காரர் கைது: மேலும் 4 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: