கள்ளச்சந்தையில் மது விற்றபோது சிக்கியதால் பெட்ரோல் ஊற்றி போலீசை மிரட்டி தாயை மீட்ட மகள்: இருவரையும் கைது செய்து விசாரணை


சேலம்: பைக்கில் சென்று மது விற்ற பெண்ணை போலீசார் பிடித்தபோது, அவரது மகள் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை மிரட்டல் விடுவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாவட்டம் ஆத்தூர் ரூரல் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று, கள்ளச்சாராயம் மற்றும் கள்ளச்சந்தையில் டாஸ்மாக் மது விற்பனை தடுக்க தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அங்குள்ள கறிக்கடை அருகே பைக்கில் வந்து டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றுக்கொண்டிருந்த அப்பகுதியை சேர்ந்த சுரேஷ் மனைவி சங்கீதாவை (40) பெண் போலீஸ் ஏட்டுகள் மடக்கி பிடித்தனர். பைக்கில் இருந்து 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்ததோடு, அவரை ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தனர்.

அப்போது, 100 அடி தூரத்தில் இருந்த வீட்டில் இருந்து சங்கீதாவின் மகள் சுஜாதா (20) ஓடி வந்து தாயை விடுவிக்காவிட்டால், உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டினார். திடீரென கேனில் வைத்திருந்த பெட்ரோலையும் உடலில் ஊற்றிக் கொண்டார். இதனால், அதிர்ச்சியடைந்த பெண் போலீஸ் ஏட்டுகள் சங்கீதாவை விட்டனர்.

உடனே அவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். மகள் சுஜாதாவும் தப்பினார். தகவலறிந்த போலீசார், ராமநாயக்கன்பாளையம் சென்று சங்கீதா, அவரது மகள் சுஜாதாவை கைது செய்தனர். போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது, தற்கொலை மிரட்டல் விடுத்தது, மதுபானத்தை பதுக்கி விற்றது உட்பட 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கள்ளச்சந்தையில் மது விற்றபோது சிக்கியதால் பெட்ரோல் ஊற்றி போலீசை மிரட்டி தாயை மீட்ட மகள்: இருவரையும் கைது செய்து விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: