×

பாஜ மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா ரூ.2.50 கோடி நிலம் மோசடி: பதிவுத்துறை நடவடிக்கை எடுக்க மறுப்பதாக சென்னை தொழிலதிபர் பரபரப்பு புகார்

தூத்துக்குடி: ரூ.2.50 கோடி நிலத்தை மோசடியாக விற்பனை செய்த பாஜ மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா, மாவட்ட பொதுச்செயலாளர் உமரி சத்யசீலன் உள்பட 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை தொழிலதிபர் பதிவுத்துறை, நிலஅபகரிப்புதடுப்பு பிரிவில் புகார் மனு அளித்துள்ளார். ஆனால் பதிவுத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி அருகே தருவைகுளம் பகுதியை சேர்ந்தவர் தாமஸ் கிங்ஸ்டன்(43). இவர், சென்னை மற்றும் ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், நேற்று தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது: எனக்கு சொந்தமான 30 சென்ட் இடம், தூத்துக்குடி ஸ்பிக் நகர் பகுதியில் உள்ளது. இந்த சொத்து சுமார் 2.50 கோடி ரூபாய் வரை மதிப்புள்ளது. எனது தொழிலுக்கு பணம் தேவைப்பட்டதால் இந்த இடத்தை விற்பனை செய்ய முடிவு செய்து தூத்துக்குடி மாவட்டம் உமரிக்காடு பகுதியை சேர்ந்த பாஜ மாவட்ட பொதுச்செயலாளர் உமரி சத்யசீலன் மற்றும் அவரது நண்பர் பாஜவை சேர்ந்த மாதவன் ஆகியோரை அணுகினேன். அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் பெற்றுக் கொண்டு எனது இடத்தை விற்பனை செய்து தருவதற்காக பவர் எழுதிக் கொடுத்தேன்.

கடந்த 14 மாதங்களாக இடத்தை விற்பனை செய்யாமல் அவர்கள் இழுத்தடித்து வந்தனர். இதையடுத்து இடத்திற்கான ஆவணங்களை திருப்பித் தருமாறு கேட்டபோது, போலி ஆவணங்கள் தயாரித்தும், எனது வாழ்நாள் உறுதிச் சான்றை போலியாக தயார் செய்தும், எனது வங்கி கணக்கில் ரூ.80 லட்சம் வரவு வைத்ததாக வங்கி ஆவணங்களை போலியாக தயார் செய்தும் முன்னாள் எம்பியும் தற்போதைய பாஜ மாநில துணை தலைவருமான சசிகலா புஷ்பா பெயருக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்பு நிலத்தை பத்திரப்பதிவு செய்துள்ளனர். இந்த மோசடி பத்திரப்பதிவு விவகாரம், எனக்கு தெரிய வந்ததை தொடர்ந்து சசிகலா புஷ்பா உள்பட 3 பேரையும் அணுகி பணத்தை தருமாறு கேட்டேன். மூவரும் பணம் தர மறுத்து கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து பத்திரப்பதிவு சார் பதிவாளர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நில அபகரிப்பு பிரிவு போலீசில் புகார் மனு அளித்துள்ளேன். மோசடி பத்திரப்பதிவை ரத்து செய்து அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளேன், என்றார்.

 

The post பாஜ மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா ரூ.2.50 கோடி நிலம் மோசடி: பதிவுத்துறை நடவடிக்கை எடுக்க மறுப்பதாக சென்னை தொழிலதிபர் பரபரப்பு புகார் appeared first on Dinakaran.

Tags : BJP ,vice president ,Pushpa ,Thoothukudi ,Sasikala Pushpa ,district general secretary ,Umari Sathyaseelan ,Sasikala ,Dinakaran ,
× RELATED மதுரை எல்ஐசி அலுவலகத்தில் தீ பெண் மேலாளர் உயிரிழப்பு