பாஜ இரட்டை வேடத்தால் எடப்பாடி அப்செட் தேர்தல் கூட்டணியில் ஓபிஎஸ் புறக்கணிப்பு பார்லி. கூட்டத்துக்கு மகனுக்கு அழைப்பு : எம்பி பதவி செல்லாது என தீர்ப்பு வந்தும் கூட்டத்தில் பங்கேற்பு

தேனி: தேசிய அளவிலான தேர்தல் கூட்டணியில் ஓபிஎஸ்சை புறக்கணித்துவிட்டு, தேனி தொகுதியில் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என தெரிவித்தும் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க ஓபிஎஸ் மகனுக்கு அழைப்பு விடுத்ததால், எடப்பாடி அப்செட் ஆகி உள்ளார். அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் எழுந்தது. இதனையடுத்து, அதிமுக அலுவலகத்திற்குள் புகுந்து கலவரம் ஏற்படுத்தியதாக கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் தேனி தொகுதி எம்.பி ரவீந்திரநாத் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.

தேனி தொகுதி எம்.பி ரவீந்திரநாத் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது சம்பந்தமாக மக்களவை சபாநாயகருக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை தேனி தொகுதி எம்.பியை அதிமுக அல்லாதவர் என அறிவிக்கவில்லை. மேலும் சமீபத்தில் ரவீந்திரநாத் எம்பி வெற்றி பெற்றது செல்லாது என உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. இதுவரை அவர் மேல்முறையீடு செய்யவில்லை. இந்நிலையில், டெல்லியில் பிரதமர் தலைமையில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்திற்கு அதிமுக சார்பில் கலந்து கொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வத்துக்கோ, அவரது தரப்பினருக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால் பாஜ தலைமை தங்களை மட்டுமே உண்மையான அதிமுக என அங்கீகரித்துள்ளது என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் இன்று (ஜூலை 20) ஆலோசனை நடத்த அழைப்பு விடுத்தார். இதில் தேனி தொகுதி எம்.பி ரவீந்திரநாத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

தேனி தொகுதி எம்.பி ரவீந்திரநாத் நேற்று அவரது டிவிட்டர் பக்கத்தில், ‘‘நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு, கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் முக்கிய அம்சங்கள் மற்றும் மசோதாக்கள் குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்துக் கட்சி தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதன் பேரில் அதிமுக சார்பில் நான் கலந்து கொள்ள இருக்கிறேன்’’ என பதிவிட்டிருந்தார். தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்திற்கு அதிமுக தரப்பில் ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பினருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதேசமயம், நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு அனைத்துக் கட்சித் தலைவர் வரிசையில் ரவீந்திரநாத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதன்மூலம், பாஜ இரட்டை வேடம் போடுவதாக எடப்பாடி உட்பட அதிமுகவினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

The post பாஜ இரட்டை வேடத்தால் எடப்பாடி அப்செட் தேர்தல் கூட்டணியில் ஓபிஎஸ் புறக்கணிப்பு பார்லி. கூட்டத்துக்கு மகனுக்கு அழைப்பு : எம்பி பதவி செல்லாது என தீர்ப்பு வந்தும் கூட்டத்தில் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: