ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் ஸ்ரீ பவானி அம்மன் கோயிலில் ஆடித்திருவிழாவையொட்டி கிராம மக்கள் அலகு குத்தி, பால் குடம் ஏந்தி வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். பெரியபாளையம் கிராமத்தில் புகழ் பெற்ற ஸ்ரீ பவானி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் ஆடித்திருவிழா கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி தொடங்கியது. இந்த திருவிழாவிற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். இந்நிலையில், 10 வாரங்கள் முடிந்து புதன் கிழமையான நேற்று முன்தினம் மாலை உள்ளூர் மக்களாகிய பெரியபாளையம் பவானி நகர் இளைஞர்கள், வியாபாரிகள் மற்றும் அம்பேத்கர் நகர், தண்டுமாநகர், அரியப்பாக்கம், ராள்ளபாடி, அருந்ததியர் நகர் மக்கள் என 100க்கும் மேற்பட்டோர் தர்மராஜா கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
பின்னர், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என 10 பேர் தேர் இழுத்துக்கொண்டும், 150 பேர் அலகு குத்திக்கொண்டும், 210 பேர் பால்குடம் தலையில் சுமந்தும் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று பவானி அம்மன் கோயிலை அடைந்து அம்மனை தரிசனம் செய்தனர். பின்னர் பால் குடத்தில் இருந்த பாலை அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். இதில் உள்ளூர் மக்களுக்காக பவானி அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகமும், பின்னர் மலர் அலங்கார தரிசனமும் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியுடன் 10 வார ஆடித்திருவிழா நிறைவடைந்தது.
The post பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் ஆடித்திருவிழா கோலாகலம்: அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.