×

ஊட்டி மலை ரயில் நிலையத்தில் சர்ச்சை பாரதியார் கவிதையை வடமாநில பண்டிதர் எழுதியதாக பதாகை: இந்தி பற்றியும் உயர்வாக பதிவு தமிழ் ஆர்வலர்கள் கடும் கண்டனம்

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட ஊட்டி மலை ரயில் நிலையம் ஒன்றிய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.7 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஊட்டி மலை ரயில் நிலைய வளாகத்தின் உட்புறம் உள்ள சுவர்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் அச்சிடப்பட்ட பாதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் பாரதியார் எழுதிய கவிதை வரிகள், மதன் மோகன் மாளவியா என்பவர் எழுதியதாக வைத்திருக்கும் பதாகை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ’’இந்தியை பற்றி சிறு பேச்சு அறிவு மூலமாக இந்தி பேசத் தெரியாத மக்கள் நிறைய சாதிக்கின்றனர்-அனந்த சயனம் ஐயங்கார்’’ என்ற வாசகம் அடங்கிய பதாகையும் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் மலை ரயிலில் பயணித்துள்ளார். ஊட்டி ரயில் நிலையத்தில் வந்திறங்கியதும், இந்த பதாகையை பார்த்து அதிர்ச்சியடைந்து, அதனை படம் எடுத்து பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாரதியார் எழுதிய வரிகளை வேறு யாரோ எழுதியதுபோல் ஊட்டி ரயில் நிலையத்தில் பதாகை அமைக்கப்பட்டிருப்பது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் ஒன்றிய அரசுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். இது குறித்து ஊட்டி ரயில் நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘வாசகங்கள் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. தெற்கு ரயில்வே தலைமையில் இருந்து வைக்கச் சொன்னார்கள் வைத்தோம்’’ என்பதோடு முடித்துக்கொண்டனர். பாரதியாரின் புகழ்பெற்ற வரிகள் என்பதைக் கூட அறியாமல் அதனை திரித்து வட மாநிலத்தை சேர்ந்த பண்டிதர், கல்வியாளரின் பெயரை அதன் அடியில் பொறித்திருப்பதால் வேண்டுமென்றே ரயில்வே துறை சர்ச்சையை கிளப்பியுள்ளது என பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

The post ஊட்டி மலை ரயில் நிலையத்தில் சர்ச்சை பாரதியார் கவிதையை வடமாநில பண்டிதர் எழுதியதாக பதாகை: இந்தி பற்றியும் உயர்வாக பதிவு தமிழ் ஆர்வலர்கள் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Banner ,Ooty Hill Railway Station ,Ooty ,Nilgiris district ,Union government ,
× RELATED மதுரை எல்ஐசி அலுவலகத்தில் தீ பெண் மேலாளர் உயிரிழப்பு