×

கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிய விண்ணப்பத்தை தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: டாஸ்மாக்கில் ஊழல் நிலவுவதாகவும், டாஸ்மாக் கடைகளில் பாட்டில்களுக்கு 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை அதிகம் விற்பனை செய்வதாகவும், இதன்மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாயை டாஸ்மாக் கடை விற்பனையாளர், மேலாளர் உள்ளிட்டோர் பகிர்ந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டி சென்னையைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் முரளிதரன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்குவது குறித்து அரசு ஏன் மறுபரிசீலனை செய்யக் கூடாது என்று கேள்வி எழுப்பியிருந்தது.

வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி கே.குமரேஷ் பாபு அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு பிளீடர் எட்வின் பிரபாகர், கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது, மாநில அரசின் கொள்கை முடிவு. இதுதொடர்பாக உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது என்றார். இதை ஏற்ற நீதிபதிகள், கள் விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோரி மனுதாரர் அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். முறைகேடு குற்றச்சாட்டு மீதான விசாரணை தொடர்பாக அரசு தரப்பு விளக்கத்தை கேட்ட பிறகே உத்தரவு பிறப்பிக்க முடியும் என்று கூறி, விசாரணயை 8 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

The post கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிய விண்ணப்பத்தை தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu govt ,Chennai ,Tamil Nadu government ,Tasmac ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டு பள்ளிகளில் கல்விசாராத...