தேசிய பாதுகாப்பு மாதத்தையொட்டி தலைக்கவசம், சீட் பெல்ட் குறித்த விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் தொடங்கி வைத்தார்


காஞ்சிபுரம்: தேசிய பாதுகாப்பு மாதத்தையொட்டி தலைக்கவசம், சீட் பெல்ட் குறித்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தார். தேசிய பாதுகாப்பு மாதத்தையொட்டி காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்துத்துறை சார்பில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் தலைக்கவசம், சீட் பெல்ட் அணிவதன் முக்கியத்துவம் குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை கலெக்டர் கலைச்செல்வி மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான போக்குவரத்து போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு இருசக்கர வாகனத்தில் பேரணியாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் இதில், தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் குறித்து நாட்டுப்புறக் கலைஞர்கள் நடத்திய விழிப்புணர்வு நாடகமும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன், மோட்டார் ஆய்வாளர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். குடற்புழு நீக்க மாத்திரை: மேலும் காஞ்சிபுரம் ராணி அண்ணாதுரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் நேற்று நடைபெற்றது. இதில், கலெக்டர் கலைச்செல்வி மோகன் கலந்துகொண்டு, இப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு, குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். இதில் மாவட்டத்தில் உள்ள 1 முதல் 19 வயது வரை உள்ள 3,81,186 குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கும், 20 முதல் 30 வயது வரை உள்ள 83,997 பெண்களுக்கு (கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர) அல்பென்டசோல் என்ற மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து குழந்தைகள், மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு சுகாதாரத்துறை, குழந்தை வளர்ச்சித்துறை, சமூக நலத்துறை மற்றும் பள்ளிக்கல்வி துறை பணியாளர்கள் மூலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் ஆகிய இடங்களில் குடற்புழு நீக்க மாத்திரைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு முகாம் காஞ்சிபுரம் மாவட்ட துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) பிரியாராஜ் மற்றும் இரண்டாம் நிலை அலுவலர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. விடுபட்ட குழந்தைகள், மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு வரும் 16ம் தேதி அல்பென்டசோல் மாத்திரை வழங்கப்பட உள்ளது.

இம்மாவட்டத்தில் உள்ள 1 முதல் 2 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கு அல்பென்டசோல் தலா 1/2 மாத்திரை மற்றும் 2 முதல் 19 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கும், 20 முதல் 30 வயது வரை உள்ள பெண்களுக்கும் தலா 1 மாத்திரை வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த குடற்புழுக்களை நீக்கி குழந்தைகள் ஆரோக்கியத்தை பேணிக் காக்க மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் தகுந்த ஒத்துழைப்பு நல்கி அனைவரும் மேற்கண்ட நாளில் குடற்புழு மாத்திரைகளை உட்கொள்ளுமாறு கலெக்டர் கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) பிரியாராஜ், முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அரசு பள்ளிகளில் ஆய்வு
காஞ்சிபுரம் வட்டத்திற்கு உட்பட்ட ஓரிக்கை பகுதியில் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளி மற்றும் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளிகளை கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஓரிக்கை அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி, ஆரம்பப்பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை கேட்டறிந்தார். பின்பு பள்ளியை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதனையடுத்து, கீழ்கதிர்பூர் தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சென்று ஆய்வு செய்து, அங்குள்ள வரவு, செலவு, கடன் தொகை வழங்கப்பட்ட ஆவணங்களையும், பாதுகாப்பு அறையையும் பார்வையிட்டார்.

பின்னர், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ₹21.29 லட்சம் மதிப்பில் கடன் உதவிகளை வழங்கினார். அதனைத்தொடர்ந்து, தாமல் கால்நடை மருந்தகத்தை பார்வையிட்டு, கால்நடைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், மருந்துகள் இருப்பு பதிவேடுகள் போன்றவற்றை கலெக்டர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது கூட்டுறவு துறை மண்டல இணைப் பதிவாளர் ஜெய, ஆதிதிராவிடர் நல அலுவலர் சத்யா, மாவட்ட கல்வி அலுவலர் செந்தில்குமார், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post தேசிய பாதுகாப்பு மாதத்தையொட்டி தலைக்கவசம், சீட் பெல்ட் குறித்த விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: