ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் பேரவை கூட்டத்தொடர் நாளை கூடுகிறது: நிதிநிலை அறிக்கை 19ம் தேதி தாக்கல்

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இந்தாண்டிற்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் நாளை ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் கூடுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழ்நாடு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் தேர்தல் ஆயத்தப்பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இந்தாண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் நளை தொடங்க உள்ளது. இந்திய அரசியலைமைப்பு சட்டத்தின் படி, ஒரு மாநிலத்தின் நிதியாண்டிற்கான முதல் கூட்டத்தொடர் என்பது அம்மாநில ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு. அந்தவகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேரவையில் நாளை காலை 10 மணியளவில் உரை நிகழ்த்த உள்ளார். அவரது உரையின் தமிழாக்கத்தை சட்டப்பேரவை தலைவர் அப்பாவு வாசிக்க உள்ளார். அதன்பின் அலுவல் ஆய்வு குழு கூடி எத்தனை நாட்களுக்கு அவையை நடத்தலாம் என தீர்மானிக்க உள்ளது. இதனையடுத்து ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு அதன் மீதான விவாதம் 3 நாட்கள் வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. வரும் 19ம் தேதி 2024-25ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார்.

மேலும், 20ம் தேதி முன் பண மானிய கோரிக்கையும், 21ம் தேதி முன் பண செலவின கோரிக்கையும் தாக்கல் செய்யப்பட உள்ளன. கடந்தாண்டு ஆளுநர் உரையின் போது அரசு தயாரித்த உரையில் சில பத்திகளை வாசிக்காமல், சில வரிகளை சேர்த்தும் வாசித்தார். உடனடியாக ஆளுநர் தானாக சேர்த்த பகுதி அவை குறிப்பில் இடம் பெற கூடாது என்றும், அரசின் சார்பில் தயாரித்து சபைக்கு அளிக்கப்பட்ட உரையே இடம் பெற வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுபோல, இந்தாண்டும், ஆளுநருக்கு அரசு தரப்பில் உரை தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது. இதனை ஆளுநர் வாசிப்பாரா? அல்லது கடந்த முறை போல் அரசியலமைப்பு சட்டத்தை மீறி சில வாசகங்களை தவிர்த்து விட்டு வாசிப்பாரா என்பது நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் தெரியவரும். இந்தாண்டிற்கான முதல் கூட்டத்தொடர் என்பதால் தலைமைச்செயலகம் முழுவதும் சுத்தம் செய்யும் பணிகள் நடந்தன. பேரவையின் மண்டபத்தில் ஒரு சில இடங்களில் முன்பு வைக்கப்பட்டிருந்த திரையை விட அகன்ற திரைகள் வைக்கப்பட்டு உள்ளன. முதல் கூட்டத்தொடர் என்பதால் எதிர்க்கட்சிகள் சட்டம் – ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்னைகள் தொடர்பான கேள்விகளை எழுப்ப திட்டமிட்டுள்ளன. இதற்கு தகுந்த பதிலை அளிக்க அமைச்சர்களும் தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

The post ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் பேரவை கூட்டத்தொடர் நாளை கூடுகிறது: நிதிநிலை அறிக்கை 19ம் தேதி தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: