ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டமிட்டு நாட்டு வெடிகுண்டு வாங்கியது எனக்கு தெரியாது: ரவுடி புதூர் அப்பு வாக்குமூலம்

பெரம்பூர்: ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டமிட்டு நாட்டு வெடிகுண்டு வாங்கியது எனக்கு தெரியாது என ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரவுடி புதூர் அப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சம்போ செந்திலோடு தனக்கு நேரடி தொடர்பு இல்லை, சம்போ செந்தில் கூட்டாளிகள் மூலம் கே.கே.நகர் பகுதியில் உள்ள குடோனில் 6 நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்தேன் எனவும் ரவுடி புதூர் அப்பு தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலை வழக்கு சம்பந்தமாக இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டனர். நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்து கொடுத்த ரவுடி புதூர் அப்பு தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில், தனிப்படை போலீசார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைது செய்து நேற்று சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இவர் மீது 4 கொலை வழக்கு உட்பட 16 வழக்குகள் உள்ளன.

புதூர் அப்புவிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல தகவல்கள் கிடைத்துள்ளன. வழக்கு ஒன்றில் சிறையில் இருந்தபோது புதூர் அப்புவுடன் சம்பவ செந்திலின் கூட்டாளிகள் இருந்துள்ளனர். இதன்மூலம் சம்பவ செந்திலின் தொடர்பு கிடைத்துள்ளது. சம்பவ செந்தில் கூறியதன்படி, சிலமுறை புதூர் அப்பு வெடிகுண்டுகள் தயார் செய்து கொடுத்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குக்கு முன்பு சம்பவ செந்தில் வெடிகுண்டுகளை தயார் செய்து கொடுக்கும்படி புதூர் அப்புவுக்கு செய்தி அனுப்பியுள்ளார்.

இதன்படி, புதூர் அப்பு, வெடிகுண்டுகள் தயார் செய்துகொடுத்துள்ளார். முதலில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகள் தரமற்று இருந்ததால் 2வது முறையாக வெடிகுண்டுகளை தயார் செய்து கொடுத்துள்ளார். அந்த வெடிகுண்டுகளை கோடம்பாக்கத்தில் உள்ள ராஜேஷ் என்பவரின் குடோனில் வைத்து பாதுகாத்து வந்துள்ளனர். அதற்கான நேரம் வந்தவுடன் முகிலன், விஜயகுமார் ஆகியோர் மூலம் வெடிகுண்டுகளை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று ஓமந்தூரார் மருத்துவமனை அருகே தற்போது தலைமறைவாக உள்ள மொட்டை கிருஷ்ணா, ஹரிஹரன் ஆகியோரிடம் கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

அவர்கள் வெடிகுண்டை பத்திரமாக அருளிடம் ஒப்படைத்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட இடத்துக்கு கொலையாளிகள் வெடிகுண்டை கொண்டு சென்றனர். ஆனால் அதை பயன்படுத்தவில்லை. ஆம்ஸ்ட்ராங்கை கத்தியால் வெட்ட முடியவில்லை என்றால் வெடிகுண்டை வீசிவிட்டு பின்னர் வெட்டலாம் என்பதற்காக அதனை எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் கொலையாளிகள் அதனை பயன்படுத்தவில்லை. ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்த இடத்தில் இருந்து சில வெடிகுண்டுகளையும் கோடம்பாக்கத்தில் இருந்து சில வெடிகுண்டுகளையும் கைப்பற்றினர்.

ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்யத்தான் வெடிகுண்டு கேட்கிறார்கள் என்பது தனக்கு தெரியாது. சம்பவம் நடந்தபிறகுதான் நான் தயாரித்த வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர் என்பது தெரியவந்தது. இதனால் தலைமறைவானேன். இவ்வாறு தெரிவித்துள்ளார். இதையடுத்து எழும்பூர் நீதிமன்றத்தில் புதூர் அப்புவை ஆஜர்படுத்தி பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்க உள்ளனர். இதையடுத்து கொலை வழக்கில் புதூர் அப்புவுடன் சேர்த்து 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் 25 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளார். ஆயுள் தண்டனை கைதி நாகேந்திரன் மீது குண்டர் சட்டம் போடப்படவில்லை. இன்னும் இந்த வழக்கில் மொட்டை கிருஷ்ணா என்கின்ற கிருஷ்ணகுமார், சம்பவ செந்தில் ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இந்த வாரம் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.

The post ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டமிட்டு நாட்டு வெடிகுண்டு வாங்கியது எனக்கு தெரியாது: ரவுடி புதூர் அப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.

Related Stories: