காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு விரைவில் வட்டவடிவ ரயிலை இயக்க பரிசீலனை: கோட்ட உதவி மேலாளர் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு செய்து, விரைவில் வட்டவடிவ ரயிலை இயக்க பரிசீலனை செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே சென்னை கோட்ட உதவி மேலாளர் சச்சின் புனிதா தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு செய்யப்பட்டிருக்கும் வசதிகள் குறித்து, தெற்கு ரயில்வே சென்னை கோட்ட உதவி மேலாளர் சச்சின் புனிதா ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், பெரம்பூர் வழியாக சென்டரல் ரயில் நிலையத்துக்கும், பின்னர் அங்கிருந்து அதே மார்க்கத்தில் திரும்பிச் செல்லும் ரயிலை பயணிகள் வட்டவடிவ ரயில் என்று அழைப்பதாக தெரியவந்துள்ளது. இதனை கொரோனா பாதிப்புக்குப் பிறகு இந்த ரயில் நிறுத்தப்பட்டிருந்தது.

இதனால், இந்த வட்டவடிவ ரயிலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து பரிசீலித்து வட்டவடிவ ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ரயில் நிலையங்களில் பயணிகள் தங்குவதற்கான வசதிகள் குறித்து, பல ரயில் நிலையங்களில் வருடாந்திர ஆய்வு செய்து வருகிறோம். இதில், ரயில் நிலயங்களில் பயணிகள் தங்கும் அறை, காத்திருப்போர் அறை ஆகியனவற்றில் தங்குபவர்களுக்கு அனைத்து வசதிகள் மற்றும் பயணிகள் தெரிந்துகொள்ளும் வகையில் அனைத்து வட்டார மொழிகளிலும் பெயர் பலகை எழுதி வைக்க வேண்டும். மேலும், ரயில் நிலயங்களை முறையாகவும், சுத்தமாகவும் பராமரிக்க வேண்டும்.

ரயில் நிலையங்களில் தங்கும் அறைகள் தேவைப்படும் பயணிகள், முன்கூட்டியே இணையம் வாயிலாக முன்பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு முன்பதிவு செய்வோருக்கு மட்டுமே அறைகள் ஒதுக்கப்படும்” என்றார். அப்போது, தெற்கு ரயில்வே சென்னை கோட்ட உதவி மேலாளர் சச்சின் புனிதாவிடம், வட்டவடிவ ரயிலை விரைவாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில்வே பயணிகள் ஆலோசனை குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன் கேட்டுக்கொண்டார். அதற்கு, விரைவில் வட்டவடிவ ரயிலை இயக்க பரிசீலனை செய்யப்படும் என கோட்ட உதவி மேலாளர் உறுதியளித்தார். ஆய்வின்போது சென்னை கோட்ட உதவி வர்த்தக மேலாளர் ஸ்ரீவித்யா, கோட்ட பொறியாளர் தீட்சிதலு, மூத்த கோட்ட பொறியாளர் அகில், செயல்பாட்டு மேலாளர் ரமேஷ், காஞ்சிபுரம் ரயில் நிலைய மேலாளர் புருஷோத்தமன், ரயில்வே பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு விரைவில் வட்டவடிவ ரயிலை இயக்க பரிசீலனை: கோட்ட உதவி மேலாளர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: