குறைபிரசவத்தில் 91% குழந்தைகள் இறப்புக்கு காரணம் காற்றுமாசுபாடு: ஐநா ஆய்வறிக்கை தகவல்

புதுடெல்லி: குறைப்பிரசவத்தில் 91 சதவீத குழந்தைகளின் இறப்புக்கு காரணம் காற்று மாசுபாடு என்று ஐநா ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு, ஐநா.வின் யுனிசெப் அமைப்பு ஆகியவை தனியார் நிறுவனத்துடன் இணைந்து பிரசவம், குறைப்பிரசவம் மற்றும் கர்ப்பகாலத்தில் பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து ‘குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள்: குறைப்பிரசவத்தின் மீதான பத்தாண்டு நடவடிக்கை’ என்ற பெயரில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் வெப்பம், புயல்கள், வெள்ளம், வறட்சி, காட்டுத்தீ மற்றும் காற்று மாசு ஆகியவை கர்ப்பத்தை பாதிக்கிறது.

இது தவிர உணவு பாதுகாப்பின்மை, நீர் அல்லது உணவு மூலம் பரவும் நோய்கள், எலும்பு நோய்கள், இடம்பெயர்வு, சுகாதார அமைப்பில் பின்னடைவு போன்றவற்றின் அடிப்படையிலும் கர்ப்பம் பாதிக்கப்படுகிறது. காற்று மாசுபாடு ஒவ்வொரு ஆண்டும் 60 லட்சம் குறைப்பிரசவங்களுக்கு காரணமாக உள்ளது. எரிபொருட்களை எரிப்பதால் ஏற்படும் காற்று மாசுபாடு குறைப்பிரசவ அபாயத்தை அதிகரிக்கிறது. இது கர்ப்பமாக இருக்கும் தாய்மார்களுக்கு ஆஸ்துமா ஏற்படும் ஆபத்தை 52% அதிகரிக்கிறது. உலகின் அனைத்து பகுதிகளிலும் பருவநிலை மாற்றத்தின் தாக்கங்கள் உணரப்பட்டாலும், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் குறைப்பிரசவத்தில் 91 சதவீத குழந்தைகளின் இறப்புக்கு காரணம் காற்று மாசுபாடு என கண்டறியப்பட்டுள்ளது.

பிறக்கும் போது எடைக் குறைவாக குழந்தைகள் பிறப்பதில் 15.6%, குறைபிரசவத்தில் எடைக் குறைவாக குழந்தைகள் பிறப்பதில் 35.7% வீட்டுக் காற்று மாசுபாடு ஒரு காரணியாக இருப்பதாக சமீபத்திய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில் பருவநிலை மாற்றத்திற்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கும் இடையேயான ஒரு சிறிய, மெல்லிய தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதே நேரம், பருவநிலை மாற்றத்தினால் மிகவும் பாதித்துள்ள மாவட்டங்களில் இந்த பாதிப்பு அதிகளவில் இருந்தது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post குறைபிரசவத்தில் 91% குழந்தைகள் இறப்புக்கு காரணம் காற்றுமாசுபாடு: ஐநா ஆய்வறிக்கை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: