திருப்பூரில் அதிமுகவினர் கோஷ்டி மோதல் மாஜி அமைச்சரை தாக்க முயன்றதால் பரபரப்பு: கோபித்து கொண்டு சென்ற எம்எல்ஏக்கள்

திருப்பூர்: திருப்பூரில் அதிமுகவினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் மாஜி அமைச்சரை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக திருப்பூர் மாநகர் மாவட்டம், திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனை கூட்டம் குமார் நகரில் நேற்று நடைபெற்றது. மாநகர மாவட்ட செயலாளரும், அதிமுக தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ தலைமை வகித்தார். கூட்டத்தில் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார், முன்னாள் அமைச்சரும், பல்லடம் தொகுதி எம்எல்ஏவுமான எம்.எஸ்.எம்.ஆனந்தன், முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் பொள்ளாச்சி ஜெயராமன் உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்களை அந்தந்த வார்டு செயலாளர்களிடம் வழங்கினார்.

25வது வார்டு செயலாளரும் மாநகராட்சி கவுன்சிலருமான தங்கராஜிடம் உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்களை மாவட்ட செயலாளர் வழங்கியபோது, அதே 25வது வார்டைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி பழனிச்சாமி என்பவர் தன்னிடம் வழங்குமாறு கூறி தங்கராஜை தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் அவர்கள் இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது. அப்போது கவுன்சிலர் தங்கராஜுக்கு ஆதரவாக எம்எல்ஏ எம்.எஸ்.எம். ஆனந்தன், அதிமுக நிர்வாகி பழனிச்சாமியை கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த பழனிச்சாமி, எம்.எஸ்.எம். ஆனந்தனையும் தாக்க முற்பட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து எம்எல்ஏ எம்.எஸ்.எம். ஆனந்தன் பழனிச்சாமியை தாக்குவதுபோல் சென்றார். அப்போது ஒரு சில நிர்வாகிகள் பழனிச்சாமியை கட்டாயப்படுத்தி வெளியே இழுத்து சென்றனர். இதனால் அங்கு பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதற்கிடையே அதிமுக தொண்டர் ஒருவர் கையில் உருட்டு கட்டையுடன் வந்து, ‘‘எம்.எஸ்.எம். ஆனந்தனை யார் பேசினாலும் நான் சும்மா விடமாட்டேன்’’ எனக்கூறி ரகளை செய்தார். இந்த பிரச்னை முடிந்த நிலையில் திருப்பூர் தெற்கு தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சிக்கு செல்வதற்காக எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், எம்.எஸ்.எம். ஆனந்தன், முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் ஆகியோர் காரில் புறப்பட்டு சென்றனர்.

அப்போது வடக்கு தொகுதி எம்எல்ஏ அந்த கூட்டத்திற்கு வர மாட்டேன் என்று கூறி அருகில் உள்ள அவருடைய அலுவலகத்திற்கு சென்றார். ஆனால் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் அவரை சமாதானப்படுத்தி அவருடைய காரில் அழைத்துச் சென்றார். ஆனாலும் வடக்கு தொகுதி எம்எல்ஏ விஜயகுமார் பாதியில் காரில் இருந்து இறங்கி கோபித்து கொண்டு தனது அலுவலகம் வந்து சேர்ந்தார். இதனால் குமார் நகரில் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் அதிமுகவில் ஏற்கனவே பயங்கர கோஷ்டி பூசல் நிலவி வரும் நிலையில் நேற்று அது பூதாகரமாக வெடித்தது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், ஓபிஎஸ்சும் தான் சண்டையிட்டு கொள்கிறார்கள் என்றால், கீழ் மட்டம் வரையிலும் இது நீடிக்கிறது என தொண்டர்கள் பேசி சென்றனர்.

The post திருப்பூரில் அதிமுகவினர் கோஷ்டி மோதல் மாஜி அமைச்சரை தாக்க முயன்றதால் பரபரப்பு: கோபித்து கொண்டு சென்ற எம்எல்ஏக்கள் appeared first on Dinakaran.

Related Stories: