‘அக்னி’ தணிந்து குளிர்ச்சி நெல்லையில் இடி, மின்னலுடன் பலத்த மழை-சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது

நெல்லை : நெல்லையில் நேற்று மாலை இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில், 5 நாட்களில் மீண்டும் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.பொதுவாக ஏப்ரல், மே மாதங்கள் கோடை காலமாகும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இறுதியிலேயே வெயிலின் தாக்கம் தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களிலும் கடும் வெயில் நிலவி வந்தது. கடந்த ஆண்டு நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தென் மேற்கு பருவமழை ஏமாற்றம் அளித்த நிலையில், கடும் வெயில் காரணமாக தாமிரபரணி ஆற்றிலும் நீர்வரத்து குறைந்தது.

இந்நிலையில் மே மாதம் தொடங்கியதும் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. அக்னி நட்சத்திரம் கடந்த 4ம் தேதி தொடங்கிய போதிலும், மழை அக்னி நட்சத்திரத்தை குளிர்வித்தது. ஆனால் அதற்கு பின்னர் கடந்த 5 நாட்களாக மழை இல்லை. இதனால் கடந்த இரண்டு நாட்களாக கடும் வெப்பம் நிலவி வந்தது. காலை முதலே சூரிய வெயிலின் தாக்கம் சுட்டெரித்தது. நேற்றும் பகலில் நல்ல வெப்பம் நிலவியது.

ஆனால், மாலை 3 மணிக்கு பிறகு லேசான குளிர்ந்த காற்று வீசியது. இதைத் தொடர்ந்து நெல்லையில் இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. நெல்லை சந்திப்பு, வண்ணார்பேட்டை, தச்சநல்லூர், புதிய பஸ் ஸ்டாண்ட், நெல்லை டவுன், தியாகராஜநகர், மகாராஜநகர், மேலப்பாளையம், சுத்தமல்லி, ராமையன்பட்டி, களக்காடு, நாங்குநேரி, வள்ளியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. இதனால் பகலில் நிலவிய வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.

நெல்லையில் பலத்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பாளை. மார்க்கெட், வண்ணார்பேட்ைட, பாளை. பஸ் ஸ்டாண்ட், நெல்லை சந்திப்பு ஈரடுக்கு ேமம்பாலம் கீழ் பகுதி உள்ளிட்ட பகுதிகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் தேங்கியது. தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதிகளிலும் இடி, மின்னலுடன் நல்ல மழை பெய்தது. தென்காசி மாவட்டம், சுரண்டை, பண்பொழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை காணப்பட்டது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி, நாங்குநேரியில் 14 மி.மீ., பாளையங்கோட்டையில் 2 மி.மீ., ராதாபுரத்தில் 5 மி.மீ., நெல்லையில் 8 மி.மீ. மழை பதிவானது.

அணைகளைப் பொருத்தவரை, பாபநா சம் அணையின் நீர்மட்டம் 23.90 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 82 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 25 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 48.75 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 69.60 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 17 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணைப்பகுதிகளில் மழை இல்லை.

The post ‘அக்னி’ தணிந்து குளிர்ச்சி நெல்லையில் இடி, மின்னலுடன் பலத்த மழை-சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது appeared first on Dinakaran.

Related Stories: