அதிமுக மாஜி அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பேச்சு மன்னிக்க முடியாத குற்றம் என உச்சநீதிமன்றம் கண்டனம் : நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவும் உத்தரவு!!

புதுடெல்லி : தமிழ்நாட்டில் மதுபான விற்பனை, கஞ்சா புழக்கம், 12 மணி நேரவேலை தொடர்பான சட்டத் திருத்தம், வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறியது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்பியுமான சி.வி.சண்முகம், தமிழ்நாடு அரசையும், முதல்வரையும் விமர்சித்துப் பேசியிருந்தார். இந்த விவகாரங்கள் மூலம் தமிழ்நாடு அரசு மற்றும் முதல்வரின் நற்பெயருக்கும் களங்கம் விளைவித்ததாகக் கூறி, சி.வி.சண்முகத்திற்கு எதிராக நான்கு அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. தன் மீதான அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி சி.வி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பதிவு செய்யப்பட 4 வழக்குகளில், இரண்டு வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டது.

அதேநேரம், இரு வழக்குகளை ரத்து செய்ய மறுத்து உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் மேல்முறையீடு செய்தார். அதில், ‘முதல்வரை நேரடியாக விமர்சிக்கவில்லை. தமிழ்நாடு அரசை மட்டுமே விமர்சித்ததுள்ளேன். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே என் மீது அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இரு வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்’ எனக் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் இன்று இவ்வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘மக்கள் பிரதிநிதிகளாக இருந்து கொண்டு, இதுபோன்ற மோசமான பேச்சை சி.வி.சண்முகம் பேசியுள்ளார்.

அவர் ஏன் மன்னிப்பு கேட்கக் கூடாது? எதிர்காலத்தில் இதுபோன்று பேசமாட்டேன் என்று எழுதித் தர வேண்டும். சி.வி.சண்முகத்தின் பேச்சு மன்னிக்க முடியாத குற்றமாகும். அவரது பேச்சு மோசமானவை. பொறுப்புடன் இனி செயல்பட வேண்டும். பொதுநலன் கருதி சண்முகம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வழக்குகளை 100% ரத்து செய்ய முடியாது. தவறை உணரவில்லை என்றால், வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். ’ என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் அக். 15ம் தேதிக்கு ஒத்திவைத்தும், இடைப்பட்ட காலத்தில் சி.வி.சண்முகம் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

The post அதிமுக மாஜி அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பேச்சு மன்னிக்க முடியாத குற்றம் என உச்சநீதிமன்றம் கண்டனம் : நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவும் உத்தரவு!! appeared first on Dinakaran.

Related Stories: