வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு அதிமுக மாஜி எம்எல்ஏ சத்யா வீட்டில் சோதனை: வடசென்னை மாவட்ட செயலாளர் ராஜேஷ் வீட்டிலும் நடந்தது; 22 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி

சென்னை: 2016-21ம் ஆண்டுகளில் தி.நகர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ மற்றும் அதிமுக தென்சென்னை வடக்கு மாவட்டச் செயலாளராக உள்ள சத்யா (எ) சத்தியநாராயணன் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக ரூ.2.64 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் சேர்த்துள்ளார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று சத்தியநாராயணனுக்கு சொந்தமான 22 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை வடபழனி நெற்குன்றம் காலனியை சேர்ந்தவர் சத்யா(எ)சத்தியநாராயணன். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர், நந்தனம் கலைக்கல்லூரியில் பி.காம் படிப்பு முடித்தவர், வடபழனி ஆண்டவர் நகர் 3வது தெருவில் சிறிய அளவில் சைக்கிள் கடை மற்றும் பால் விற்பனை கடை நடத்தி வந்தார். இவருக்கு மனைவி ஜெயசித்ரா மற்றும் 2 மகள்கள் உள்ளனர். மேலும், வடபழனி கங்கையம்மன் கோயில் தெருவில் டிவி, சிடி கடை நடத்தி கொண்டு வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். திடீரென அதிமுகவில் சேர்ந்தவர், ரியல் எஸ்டேட் தொழிலோடு, பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரராக பதிவு செய்து கொண்டு, அரசு ஒப்பந்தங்களை எடுத்தார்.

மேலும், விழுப்புரம், வடபழனியில் மதுபான கடையும் நடத்தி வந்தார். குறுகிய காலத்தில் சத்யா தனது தொழிலிலும், அரசியலிலும் அபார வளர்ச்சி அடைந்தார். தற்போது அதிமுக தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக சத்யா பதவி வகித்து வருகிறார். கடந்த 2016-21 ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலில் தி.நகர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலில் போட்டியிட்டபோது, கடந்த 12.5.2016ம் ஆண்டு தேர்தல் ஆணையத்தில் தனக்கு 3 கோடியே 21 லட்சத்து 42 ஆயிரத்து 036 ரூபாய் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் என 21 வகையான சொத்துக்களை கணக்கு காட்டியிருந்தார்.

பின்னர் 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைத்தார். அதேநேரம், தேர்தலின் போது, சத்யா தேர்தல் ஆணையத்தில் தனது சொத்து பட்டியலை குறைத்து கணக்கு காட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் சத்யா மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் குவித்ததற்கான முகாந்திரம் இருந்தால் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிபதி தெரிவித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாகவே அதிமுக மாவட்ட செயலாளரும் தி.நகர் முன்னாள் எம்எல்ஏவான சத்யா(எ) சத்யநாராயணன் தேர்தல் ஆணையத்தில் 2016 மற்றும் 2021ம் ஆண்டுகளில் தாக்கல் செய்த 21 வகையான சொத்து பட்டியல்களை வைத்தும், கடந்த 2016-21 ஆண்டுகளில் எம்எல்ஏவாக இருந்த காலத்திற்கு பின்னர் வாங்கப்பட்ட ரூ.16.18 கோடி மதிப்பிலான 38 வகையான சொத்து பட்டியலை வைத்து ஆய்வு செய்தபோது, தி.நகர் சத்யா(எ) சத்தியநாராயணன் தனது எம்எல்ஏ பதவியை தவறாக பயன்படுத்தி 5 ஆண்டுகளில் அதாவது 10.58 கோடி அளவுக்கு அவரின் சொத்துக்கள் உயர்ந்து இருப்பது ஆவணங்கள் மூலம் உறுதியானது.

அதில் எம்எல்ஏவாக இருந்தபோது அவரது ஊதியம், வங்கி கடன், வருமான வரி கட்டியது, ஏற்கனவே வைத்திருந்த சொத்துக்கள் மூலம் வந்த வருவாய் என அனைத்தும் ஆவணங்களை வைத்து கணக்கிட்டு கழித்து பார்த்த போது, அவரது வருமானத்திற்கு மீறி 16.33 விழுக்காடு சொத்து குவித்துள்ளது தெரியவந்தது. அதாவது, 2 கோடியே 64 லட்சத்து 40 ஆயிரத்து 653 ரூபாய் அளவுக்கு சட்டவிரோதமாக சொத்துக்களை குவித்தது உறுதியானது. அதைதொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஜோ தயாள், சத்யா(எ)சத்தியநாராயணன் மீது ஊழல் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தார்.

அதன் தொடர்ச்சியாக லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி உத்தரவுப்படி டிஎஸ்பி ஜோ தயாள் தலைமையிலான 80க்கும் மேற்பட்ட போலீசார் ஒரே நேரத்தில் தி.நகர் சத்யாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், நண்பர்கள், பினாமிகள், உறவினர்கள் என 22 இடங்களில் நேற்று காலை சோதனை நடத்தினர். குறிப்பாக, சென்னை வடபழனி நெற்குன்றம் காலனியில் உள்ள தி.நகர் சத்யா வீடு, வடபழனி ஆண்டவர் நகரில் உள்ள சைக்கிள் கடை, வடபழனி கங்கையம்மன் கோயில் தெருவில் உள்ள பால் விற்பனை மற்றும் டிவி. சிடி கடை, தி.நகர் பாரதி நகர் 1வது தெருவில் உள்ள ரியல் எஸ்டேட் அலுவலகம், தி.நகர் பாரதி நகரில் உள்ள மகள் கவிதாவின் அலுவலகம், சத்யாவின் நண்பரும், அதிமுக மாவட்ட செயலாளரான ஆர்.எஸ் ராஜேஷ், மயிலாப்பூரில் உள்ள நண்பர் வீடு என சென்னையில் மட்டும் 16 இடங்களில் அதிரடி சோதனை நடந்தது.

அதேபோல், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த நெருங்கிய நண்பர் திலீப்குமார் வீடு, கோவை பொன்னேகவுண்டன் புதூர் கருவலூர் சாலையில் உள்ள சத்யாவின் மகள் கவிதாவுக்கு சொந்தமான வீடு என மொத்தம் 22 இடங்களில் சோதனை நடந்தது. சென்னை வடபழனியில் உள்ள வீட்டில் சோதனை நடந்த போது சத்யா வீட்டில் இருந்தார். அப்போது, மகள் கவிதா வீடு, அலுவலகம், உறவினர்கள், பினாமிகள் வீடுகளில் கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்களை காட்டி சத்யாவிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அப்போது 2016ம் ஆண்டு தேர்தல் ஆணையத்தில் கணக்கு காட்டி ரூ.3,21,42,036 மதிப்புள்ள சொத்து பட்டியலை வைத்து, எம்எல்ஏவாக இருந்த 2016- 2021ம் காலத்தில் அதாவது 16 கோடியே 44 லட்சத்து 74 ஆயிரத்து 365 ரூபாய் மதிப்புள்ள சொத்துக்காக உயர்ந்தது எப்படி? குறிப்பாக எம்எல்ஏவாக இருந்த 5 ஆண்டுகளில் எந்த வருமானத்தில் 13 கோடியே 23 லட்சத்து 32 ஆயிரத்து 328 ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் உயர்ந்தது எப்படி என்று பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை வைத்து நேரடியாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது தி.நகர் சத்யா அளித்த விளக்கத்தை லஞ்ச ஒழிப்பத்துறை அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர்.

தி.நகர் சத்யா வீட்டில் சோதனை நடந்தபோது, நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் அவரது வீட்டின் முன்பு குவிந்து இருந்தனர். இதனால் பாதுகாப்புக்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல், சத்யாவின் நண்பரான தண்டையார்பேட்டை சேணியம்மன் கோயில் தெருவை சேர்ந்த அதிமுக வடசென்னை வடக்கு மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் வீட்டிலும் சோதனை நடந்தது. ஆர்.எஸ்.ராஜேஷ், தமிழ்நாடு கூட்டுறவு நுகர்வோர் இணைய தலைவராகவும் உள்ளார். இவரது வீட்டில் 6 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் தி.நகர் சத்யா மற்றும் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் இணைந்து ரியல் எஸ்டேட் தொழிலில் செய்யப்பட்ட முதலீடுகள், அதில் வந்த வருமானம் உள்ளிட்ட ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. மேலும், ஆர்.எஸ்.ராஜேஷ் வீட்டில் இருந்து கணக்கில் வராத பணம், பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனையின் போது ஆர்.எஸ்.ராஜேஷ் வீட்டின் முன்பு அதிகளவில் அதிமுகவினர் கூடியிருந்ததால் அவரது வீட்டின் முன்பும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆரம்பாக்கம் பகுதியில் தி.நகர் சத்யாவின் நெருங்கிய நண்பராக திலீப்குமார் என்பவர் உள்ளார். இவருக்கு சொந்தமாக கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பகுதியில் யாமினி திருமண மண்டபம், ஏஎம்சி ரெசிடென்சி ஓட்டல் மற்றும் யாமினி புரமோட்டர்ஸ் ஆகிய 3 நிறுவனங்கள் உள்ளது. திலீப்குமார், சத்யாவின் பினாமி என்றும் கூறப்படுகிறது. இதனால் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் தமிழரசி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் திலீப்குமார் வீடு, அவரது நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

கோவை: கோவை பொன்னேகவுண்டன் புதூர், அன்னூர் கருவலூர் சாலையில் உள்ள சத்யாவின் மகள் கவிதாவுக்கு சொந்தமான வீடு மற்றும் வணிக வளாகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகம், நண்பர்கள் வீடு என 22 இடங்களில் நேற்று காலை முதல் இரவு வரை சோதனை நீடித்தது. இந்த சோதனையில் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள், லாக்கர் சாவிகள், தங்க நகைகள், ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை முழுமையாக கணக்காய்வு செய்த பிறகு தான் மொத்த சொத்துக்கள் மதிப்பு என்ன என்று தெரியவரும் என லஞ்ச ஒழிப்புத்தறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* முதல் நாளே உஷார்
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தும் தகவல் நேற்று முன்தினம் மாலையே சத்யாவுக்கு தெரியவந்துள்ளது. இதனால் தனக்கு கீழ் உள்ள பகுதிச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்களிடம் நாளை காலை(இன்று) 6 மணிக்கெல்லாம் கட்சி நிர்வாகிகளை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வரவேண்டும் என்று கூறியுள்ளார். அவர்களுக்கு காலை மற்றும் மதியம் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். இதனால் நேற்று முன்தினமே அவருக்கு தகவல் தெரிந்து விட்டதாகவும், வீட்டில் பணம், நகைகள், ஆவணங்களை அவர் மறைத்து வைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

The post வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு அதிமுக மாஜி எம்எல்ஏ சத்யா வீட்டில் சோதனை: வடசென்னை மாவட்ட செயலாளர் ராஜேஷ் வீட்டிலும் நடந்தது; 22 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: