திருவில்லியில். நெடுஞ்சாலையில் தேங்கிய மழைநீரால் விபத்து அபாயம் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்

திருவில்லிபுத்தூர், நவ.27: திருவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ச்சியாக பெய்த மழையினால் மழைநீர் தேங்கி மினி குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.திருவில்லிபுத்தூர்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மடவார் வளாகம் அருகே தொடர்ச்சியாக பெய்த மழையினால், கடந்த சில தினங்களாக மழை நீர் தேங்கி மினி குளம் போல் காட்சி அளிக்கிறது. இந்த சாலையை பொறுத்தவரை மதுரையில் இருந்து குற்றாலம், தென்காசி, செங்கோட்டை, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் வாகனங்களும் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு இந்த வழியாக செல்வது வழக்கம். நிமிடத்துக்கு நிமிடம் சிறிய மற்றும் பெரிய அளவிலான வாகனங்கள் செல்லும் இந்த சாலையில், மினி குளம் இருப்பதால் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

மழைநீர் தேங்கி உள்ள இடத்தில் சிறிய மற்றும் பெரிய அளவிலான பள்ளங்களும் உள்ளன. இதனால் விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் சிறிய வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் ஓட்டுபவர்கள் வரை ஊர்ந்து செல்லும் நிலையில் உள்ளதால், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.இதனால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு விபத்து ஏற்படுவதற்கு முன், மழை தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: