ஈரோட்டில் சட்ட விரோதமாக செயல்படும் சூதாட்ட கிளப்புகள்

ஈரோடு, நவ. 27:ஈரோடு மாநகர பகுதியில் சோலார், வீரப்பம்பாளையம், சம்பத்நகர் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோத சூதாட்ட கிளப்புகள் செயல்பட்டு வருகின்றன. சூதாட்ட கிளப்புகளுக்கு ஈரோடு மட்டுமல்லாது வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். சூதாட்ட மோகத்தால் பணம், நகை, சொத்து என அனைத்தையும் இழந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட காவல்துறைக்கு பல முறை புகார்கள் சென்ற போதிலும், சூதாட்ட கிளப்புகள் ஆளுங்கட்சியினரின் ஆசியோடு நடப்பதால் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற புகார்கள் இருந்து வருகின்றது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடக்கோரி கோர்ட்டில் வழக்கு தொடர சமூக ஆர்வலர்கள் தயாராகி வந்ததையடுத்து இதை மோப்பம் பிடித்த போலீசார், கடந்த ஒரு வாரகாலமாக சூதாட்டம் தொடர்பாக பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்து கைது செய்து வருகின்றனர். ஈரோடு மாநகர பகுதியில் வீரப்பம்பாளையத்தில் செயல்பட்டு வந்த சூதாட்ட கிளப் மீது பெயரளவில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் சோலார், சம்பத்நகர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் கிளப்புகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதால் தொடர்ந்து கிளப்புகள் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட காவல்துறை நிர்வாகம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories:

>