பூசணி வரத்து அதிகரிப்பு விலை கடும் சரிவு

பொள்ளாச்சி, நவ. 24:   பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு வெளியூர்களிலிருந்து பூசணி வரத்து அதிகரிப்பால் விலை மிகவும் சரிந்துள்ளதால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களான பொன்னாபுரம், சூலக்கல், நடுப்புணி, முத்தூர், வடக்கிபாளையம், தாளக்கரை உள்ளிட்ட பல்வே கிராமங்களில் பூசணி சாகுபடி அதிகளவில் நடக்கிறது. கடந்த முறை பெய்த தென்மேற்கு பருவமழையால், பல்வேறு கிராமங்களில் பூசணி சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டினர். இதனால் பூசணி நல்ல விளைச்சலடைந்துள்ளது. இதனால் பல இடங்களில் அறுவடை பணி துவங்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வாரமாக உள்ளூர் சுற்றுவட்டார கிராமத்திலிருந்து மட்டுமின்றி, காங்கேயம், பல்லடம், வெள்ளகோயில் உள்ளிட்ட பகுதியிலிருந்தும் மார்க்கெட்டுக்கு பூசணி வரத்து அதிகமானது.  அறுவடை செய்யப்பட்ட பூசணிகள் சுமார் 5 கிலோ முதல் 10 கிலோ வரை உள்ளது.  அதனை பெரும்பாலும்,  கேரள வியாபாரிகளே அதிகம் வாங்கி செல்கின்றனர். பூசணி வரத்து வழக்கத்தைவிட அதிகரிப்பால், மார்க்கெட்டில் நேற்றைய நிலவரப்படி ஒருகிலோ ரூ.8 முதல் அதிகபட்சமாக ரூ. 10க்கே விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பூசணி உற்பத்தி அதிகரித்தாலும், அதன் விலை கடும் சரிவால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

Related Stories: