மழையால் நிரம்பிய கண்மாய் கரைகள் உடையும் அபாயம்

மானாமதுரை, நவ.21:  மானாமதுரையில் மழையால் நிரம்பிய கண்மாய்கள் உடையும் அபாயம் நிலவுகிறது. எனவே கண்மாய் கரைகளை பலப்படுத்த பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மானாமதுரை நகரை சுற்றி பட்டத்தரசி, நவத்தாவு, குமிழன்தாவு, கே.கே.பள்ளம், சிப்காட் பெரியகண்மாய், கல்குறிச்சி கண்மாய், ஆலங்குளம் கண்மாய், தீத்தான்குளம் கண்மாய் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய்களில் பெரும்பாலானவை பொதுப்பணித்துறை பராமரிப்பிலும், சில கண்மாய்கள் ஊராட்சிஒன்றியத்தின் கட்டுப்பாட்டிலும் உள்ளன. கடந்த ஒரு வாரமாக மானாமதுரை வட்டாரத்தில் நல்ல மழை பெய்து கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பியுள்ளது. இவற்றில் நவத்தாவு, பட்டத்தரசி, சிப்காட் பெரிய கண்மாய்கரைகளை தொடுமளவுக்கு நீர் நிரம்பி மாறுகால் பாய்கிறது.  பட்டத்தரசி கண்மாய் நிறைந்து அண்ணாமலைநகர், சாஸ்தாநகர் குடியிருப்புகள் வழியாக சுப்பன்கால்வாயில் தண்ணீர் கடந்த இரண்டு நாட்களாக சென்றுகொண்டிருக்கிறது.

இந்நிலையில் மேலும் மழை பெய்தால் நகரை சுற்றியுள்ள கண்மாய்கள் உடைந்து குடியிருப்புகளுக்குள் நீர் சூழ்ந்து பெரியளவில் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் நிலை உள்ளது. இது குறித்து பட்டத்தரசியை சேர்ந்த முத்துராமலிங்கம் கூறுகையில், மானாமதுரை பேரூராட்சிக்கு உட்பட்ட 1 வது வார்டினை ஒட்டியுள்ள பட்டத்தரசி கண்மாய் நிறைந்துள்ளது. நவத்தாவு, அலங்காரக்குளம், ஆனந்தவல்லி சோமநாதர் குளங்களும் நிரம்பியுள்ளது. மழை தொடர்ந்தால் பட்டத்தரசி ராம்நகர், சாஸ்தாநகர், அண்ணாமலை நகர் குடியிருப்புகளில் தண்ணீர் புகும். எனவே கண்மாய் நீரினை விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில் பொதுப்பணித்துறையினர் கரைகளை பலப்படுத்தவும், உடைப்பு ஏற்படாமல் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Related Stories: