வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி 26ல் துவக்கம்

ஈரோடு, நவ. 21: ஈரோடு மாவட்ட வனப்பகுதியில் வருகிற 26ம் தேதி முதல் 6 நாட்களுக்கு வன விலங்குகளின் கணக்கெடுப்பு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் யானை, சிறுத்தை, மான்கள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆண்டுதோறும் வன விலங்குகள், பட்டாம் பூச்சி, பறவைகள் போன்றவைகளின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி வரும் 26ம் தேதி முதல் வன விலங்குகள் கணக்கெடுப்பு நடைபெற உள்ளதாக, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.    இது குறித்து ஈரோடு மாவட்ட வன அலுவலர் விஸ்மிஜு விஸ்வநாதன் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில், மாவட்ட வன அலுவலகம், முதன்மை வன பாதுகாவலர் அலுவலகம், தன்னார்வலர்கள் மூலம் வருகிற 26ம் தேதி முதல் வன விலங்குகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. மான், சிறுத்தை, கரடி, யானைகள் உள்ளிட்ட விலங்குகள், அவை வந்து சென்றமைக்கான அடையாளங்கள், இவற்றின் இடம் பெயர்வு குறித்த தகவல்கள் போன்றவைகளை கணக்கெடுப்பு செய்யப்பட உள்ளது. இக்கணக்கெடுப்பின் மூலம், வனப்பகுதியில் அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து திட்டமிட எளிதாகும். இவ்வாறு கூறினார்.

Related Stories: