24 கிலோ லிட்டர் ஆக்சிஜன் நிரப்ப இயலும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் 57 லட்சத்தில் திரவக ஆக்சிஜன் நிரப்பகம்

நாகர்கோவில், அக்.23: ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ₹57 லட்சம் மதிப்பில் திரவக ஆக்சிஜன் நிரப்பகம் தொடங்க உள்ளது. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவசர பிரிவுகளில் உள்ள நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது. தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை அதிகமாக உள்ளது. இதற்காக வார்டுகளுக்கு நேரடியாக குழாய்கள் மூலம் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தினசரி 10 கிலோ லிட்டர் வரை ஆக்சிஜன் தேவை உள்ளது. அதே வேளையில் 10 கிலோ லிட்டர் அளவுள்ள நிரப்பகம் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இதனால் தேவை குறைய குறைய வேகமாக ஆக்சிஜன் நிரப்பி வைக்க வேண்டிய நிலை உள்ளது. இந்தநிலையில் ₹57 லட்சம் மதிப்பில் 24 கிலோ லிட்டர் திரவக ஆக்சிஜன் நிரப்பும் வகையில் ஆக்சிஜன் நிரப்பகம் அமைக்கும் பணிகள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதனை குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே பார்வையிட்டார். நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி டீன் சுகந்தி ராஜகுமாரி, கண்காணிப்பாளர் டாக்டர் அருள்பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர். இதில் கட்டிடம் அமைக்கும் பணிகள் ₹20 லட்சம் மதிப்பிலும், திரவக ஆக்சிஜன் டேங்க் அமைக்கும் பணிகள் ₹37 லட்சம் மதிப்பிலும் நடைபெற உள்ளது. பணிகள் நிறைவு பெற்ற பின்னர் புதிய ஆக்சிஜன் நிரப்பகத்தில் இருந்து வார்டுகளுக்கு நேரடியாக குழாய்கள் மூலம் ஆக்சிஜன் விநியோகம் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: