மனையை அபகரித்து மிரட்டல் விடுத்த ரவுடிகள் மீது நடவடிக்கை ஆட்சியரிடம் தம்பதி மனு

விழுப்புரம், அக். 21:  விழுப்புரம் மாவட்டம் மேல் மலையனூர் வன்னியர் தெருவை சேர்ந்தவர் கணேசன் (70).  இவரது மனைவி யசோதா (68). இருவரும் விழுப்புரம் ஆட்சியரிடம் அளித்த மனுவில், நான் சர்க்கரை  நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவ செலவுக்கு கூட வழி இல்லாமல் வாழ்ந்து வருகிறேன். எனது மனைவிக்கு மேல் மலையனூரில் வீட்டுமனை  உள்ளது. பக்கத்து மனை உரிமையாளர் தமிழரசன் அப்பகுதியை  சேர்ந்த அரசு மருத்துவர்  மற்றும் அவரது மனைவி அருணாதேவி ஆகிய இருவரும்  எனது மனைவியின் இடத்தை அபகரித்து வீடு கட்டினர். இதுகுறித்து செஞ்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.   

இந்த வழக்கை வாபஸ்பெற வேண்டும் என்று  கூறி தமிழரசன், அவரது மனைவி அருணா தேவி ஆகியோர் மிரட்டல் விடுத்து வந்தனர். இவர்களின் தூண்டுதலின்பேரில் அதே ஊரை  சேர்ந்த துண்டு பீடி என்கின்ற கணேசன், தாஸ் தாயனூரை சேர்ந்த சண்முகம்  ஆகியோரை வைத்து புகாரை  வாபஸ்  பெறவில்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி  வருகின்றனர். இது சம்பந்தமாக யசோதா வளத்தி காவல்நிலையத்தில்  புகார் அளித்தார். புகாரை  பெற்றுக்கொண்ட காவல் அதிகாரி நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.  புகார் கொடுத்ததை  தெரிந்து கொண்ட கணேசன் சில ரவுடிகளுடன்  சேர்ந்து அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து தகராறில் ஈடுபட்டனர். எனவே இதுகுறித்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், இடத்தை  மீட்டு தரவேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.

Related Stories: