திருச்சி-ராமேஸ்வரம் சாலையில் எச்சரிக்கை தடுப்புகள் இல்லாமல் பாலப்பணி

ஆர்.எஸ்.மங்கலம், அக்.21:  திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி மற்றும் பாலம் அமைக்கும் பணி மிகவும் மெதுவாக நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்க பணி சுமார் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகின்றது. நீண்ட நாட்களாக பணி நடைபெற்று வந்தாலும், இன்னும் முழுமை அடையவில்லை. காரணம் ஆங்காங்கே பலம் கட்டும் பணி நடைபெற்று பல இடங்களில் ரோடு பள்ளம் தோண்டப்பட்டு மண் ,ஜல்லி ஆகியவை கொட்டி இருப்பதால் சில இடங்களில் பாலம் அமைப்பதற்கு கம்பிகள் கட்டப்பட்டவாறே இருப்பதாலும் போக்குவரத்திற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.

ஒரு சில இடங்களில் வாகனங்கள் செல்லும் போது பின்னால் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கண்களில் தூசி நிறைந்து விபத்திற்கு ஆளாகும் நிலை உள்ளது. இரவு நேரங்களில் பயணிப்பது மிகவும் சிரமமாக உள்ளதாகவும், பணி நடைபெறும் இடங்களில் ஒரு சில இடங்களில் சரியான முறையில் எச்சரிக்கை தடுப்புகள் அமைக்கப்படாமல் உள்ளதாகவும் வாகன ஒட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரரை அழைத்து விரைவில் பணியை முடிக்க உத்தரவிட வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: