நடைபாதை ஆக்கிரமிப்பால் அவதி

திருப்பூர், அக்.21:  திருப்பூரில் நடைபாதையை ஆக்கிரமித்து, பொருட்களை அடுக்கி வைப்பதால், பாதசாரிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். திருப்பூரில் பிரதான ரோடுகளில் உள்ள பெரும்பாலான கடைகள், நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் நடந்து செல்வதற்கு கூட வழிவிடாமல், குறுக்கே பொருட்களை வைத்து, வியாபாரம் செய்கின்றனர். நடைபாதை ஆக்கிரமிப்பால், மக்கள் ரோட்டில் நடந்து செல்ல வேண்டி உள்ளது. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. வாகன நெரிசல் ஏற்படுவதுடன், பல நேரங்களில் விபத்தும் நேரிடுகிறது. வணிக வளாகங்கள், மார்க்கெட்டுகள், மெயின் ரோடுகளில் உள்ள கடைகள், நடைபாதையை ஆக்கிரமித்து பொருட்களை வைத்துள்ளதால், நாளுக்கு நாள் நெரிசல் அதிகரித்து கொண்டே போகிறது. கடை ஆக்கிரமிப்புகள் ஒருபுறம் இருக்க, ‘பார்க்கிங்’ வசதி இல்லாததால், முக்கிய ரோடுகளில், நடைபாதையிலேயே பொதுமக்கள் வாகனங்களை நிறுத்தி வைத்து, இடையூறு செய்வதும் அதிகரித்து வருகிறது. திருப்பூர் புது மார்க்கெட் வீதியில், ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் உள்ளன.

காமராஜர் ரோடு, குமரன் ரோடு, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகளுக்கு குறைவில்லை. வாகனங்களை இடையூறாக நிறுத்துவது, பெரும் அவதியாக உள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்க, போலீசாரும், மாநகராட்சியும் நடவடிக்கை எடுத்தாலும் ஆளும்கட்சியினர் தலையீட்டால், கைவிடுகின்றனர். ஆகவே, நடைபாதை ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்த, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழில் உரிமம் வழங்கும்போதே, நடைபாதையை ஆக்கிரமிக்கக்கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்படுகிறது. அதை நடைமுறைப்படுத்த, மாநகராட்சி நிர்வாகம், உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: