காரைக்கால் நலவழித்துறை சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

காரைக்கால், அக்.20: காரைக்கால் நகர் பகுதியில் உள்ள கடைகளில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஸ்டிக்கரை, மாவட்ட நலவழித்துறை ஊழியர்கள் நேற்று ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதையடுத்து, தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை, மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா, நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் மோகன் ராஜ் உத்தரவின்பேரில், ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, காரைக்கால் நகர் பகுதியில் உள்ள நேரு வீதியில் உள்ள கடை மற்றும் வணிக நிறுவனங்களில், மாவட்ட நலவழித்துறை ஊழியர்கள், நேற்று முககவசம், சமூக இடைவெளி கடைபிடிக்கிறார்களா? என்று ஆய்வுகள் மேற்கொண்டனர். மேலும் ஒவ்வொரு கடை மற்றும் வணிக நிறுவனங்களிலும், கொரோனா விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கியும், கொரோனா விழிப்புணர்வு ஸ்டிக்கரை ஒட்டியும் சென்றனர். மேலும், வருவது மழைக்காலம் என்பதால், கொசுவின் மூலம் ஏற்படும் டெங்கு, சிக்கன்குனியா, மலேரியா போன்ற நோய்கள் ஏற்படாமல் இருக்க சுற்றுப்புறத்தை சுத்தமாகவும் தண்ணீர் தேங்காமலும் இருக்க அறிவுறுத்தப்பட்டது. இந்தஆய்வில் நலவழித்துறை தொழில்நுட்ப உதவியாளர் சேகர், சுகாதார ஆய்வாளர் சிவவடிவேல் மாற்றும் சுகாதார உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: