திண்டிவனத்தில் மின்கம்பம் முறிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிப்பு

திண்டிவனம், அக். 1:திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை விடிய விடிய மழை பெய்தது. அப்போது மரக்காணம் கூட்டுபாதை அருகே உயர்மின் அழுத்தக் கம்பி பற்றி எரிந்ததில் இரும்பு மின்கம்பம் சாலையில் சாய்ந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் சாலையில் இருந்த மின்கம்பத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். பின்னர் உயர் மின்அழுத்த கம்பியை துண்டித்துவிட்டு ஒரு சில பகுதிகளுக்கு மட்டும் மின்விநியோகம் வழங்கப்பட்ட நிலையில், திண்டிவனத்தில் பல்வேறு பகுதிகளில் மின் வினியோகம் வழங்கப்படவில்லை. இதனால் இரவு முழுவதும் கொசுக்கடியில் தூக்கம் இல்லாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.மேலும் இடி, மின்னல், காற்று ஆகியவை இல்லாமல் சீராக பெய்த மழையினால் ஏற்பட்ட மின் துண்டிப்பை உடனடியாக சீர் செய்து மின் விநியோகம் வழங்கியிருக்கலாம் என பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் இரவு நேரங்களில் மின்சாரத்துண்டிப்பை மின்வாரியம் கைவிட வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>