கள்ளக்குறிச்சியில் பரபரப்பு உயிரோடு இருப்பவரை இறந்ததாக கூறி சடலத்தை ஒப்படைத்த அரசு மருத்துவமனை

கள்ளக்குறிச்சி, செப். 30: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவரை இறந்துவிட்டதாக கூறி சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த தொட்டியம் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சியப்பன்(56). இவர் உடல்நிலை சரியில்லாமல் நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டு பிரிவின் கீழ்தளத்தில் உள்ள அறையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின்னர் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொளஞ்சியப்பனை மேல்மாடியில் உள்ள அறைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா இருப்பது நேற்று முன் தினம் உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் திருக்கோவிலூர் சந்தைபேட்டை பகுதியை சேர்ந்த பாலர்(52) உடல்நிலை சரியில்லாமல் நேற்று முன் தினம் இரவு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.    தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த பாலர் சிகிச்சை பலனின்றி இரவு 11.30 மணியளவில் இறந்துபோனார். இந்நிலையில் இரவு 11.40 மணி அளவில் கொளஞ்சியப்பன் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக கூறி உறவினர்களிடம் மருத்துவமனை நிர்வாகம் சடலத்தை ஒப்படைத்தது. அதன்படி உடலை பெற்றுக்கொண்டு தொட்டியம் கிராமத்திற்கு சென்று அடக்கம் செய்ய உறவினர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். இந்நிலையில் சடலத்தை ஆம்புலன்ஸில்  இருந்து இறக்கி பார்த்தபோது இறந்தவர் கொளஞ்சியப்பன் இல்லை என்பது தெரிந்தது.

இதுகுறித்து கொளஞ்சியப்பன் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் முறையிட்டனர். அப்போதுதான் தெரிந்தது இறந்தது பாலர் என்பது. பின்னர் சடலத்தை மீண்டும் ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து வந்து மருத்துவமனையில் ஒப்படைத்தனர். அதனையடுத்து நேற்று காலை உறவினர்களிடம் பாலர் சடலத்தை மருத்துவமனை நிர்வாகம் ஒப்படைத்தது. சிகிச்சை பெற்று வரும் நோயாளி இறந்துவிட்டதாக கூறி வேறு ஒரு நோயாளி உடலை மாற்றி அனுப்பிய சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.     இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கண்காணிப்பாளர் நேரு, கொரோனா சிறப்பு மருத்துவ அலுவலர் பழமலை ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தொட்டியம் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சியப்பன் நேற்று முன் தினம் மதியம் சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் கீழ்தளத்தில் இருந்து மேல்தளத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். கொளஞ்சியப்பன் இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து காலியாக இருந்த படுக்கையில் பாலர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் இறந்துபோனார். அப்போது இரவு பணி மாறியபோது 2 மருத்துவர்கள், 5 செவிலியர்கள் பணிமாறுதல் செய்யப்பட்டனர். பாலர் சிகிச்சை பெற்றுவந்த படுக்கையில் கொளஞ்சியப்பன் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்ததாலும், பாலர் சுயநினைவு இல்லாததால் பெயர், விலாசம் கேட்கமுடியாததாலும், பகல் நேரங்களில் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாததாலும் சிகிச்சை பெற்று வரும் கொளஞ்சியப்பன் இறந்துவிட்டதாக கூறி தவறுதலாக பாலர் சடலத்தை கொளஞ்சியப்பன் உறவினரிடம் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

இதுகுறித்து நேற்று இரவு பணியில் இருந்த 2 மருத்துவர்கள், 5 செவிலியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆட்சியர் கிரண்குராலா மற்றும் விழுப்புரம் சுகாதாரத்துறை இணை இயக்குநர் சண்முககனி ஆகியோர் விசாரணை செய்து வருகின்றனர். இறந்தவர் உடலை மாற்றி கொடுக்கப்பட்ட விவகாரத்தில் அன்று இரவு பணியில் இருந்த 7 பேர் கொடுக்கும் பதிலை பொறுத்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

துக்கத்திலும் மகிழ்ச்சிகொளஞ்சியப்பன் குடும்பத்தினர் கூறும்போது, கொளஞ்சியப்பனை நாங்கள் நல்ல முறையில் இருக்கும்போதுதான் சிகிச்சையில் சேர்த்தோம். திடீரென இறந்துவிட்டார் என்றதும் நாங்கள் அடைந்த துன்பத்திற்கு அளவே இல்லை. இந்நிலையில் சடலத்தை பார்த்தபோதே உடல் மெலிந்து இருந்ததால் சந்தேகம் அடைந்தோம். முகத்தை பார்த்தபோதுதான் இது கொளஞ்சியப்பன் இல்லை என்பதை தெரிந்து கொண்டோம். பின்னர் மருத்துவமனைக்கு போன் செய்து பார்த்தபோது அவர் மாடியில் இருப்பது தெரிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம் என்றனர்.

Related Stories: