தற்கொலை செய்து கொள்வதாக மனைவிக்கு போன் செய்துவிட்டு தூக்குபோட்டு தொழிலாளி சாவு

புதுச்சேரி, செப். 26: மனைவிக்கு போன் செய்துவிட்டு, தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி சாரம் விநாயகமுருகன் நகரில் வசித்தவர் ரவி (54). இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கூலி தொழிலாளியான ரவிக்கு ஊரடங்கு காலத்தில் சரியாக வேலை இல்லாததால் குடும்பம் வறுமையில் வாடியதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டு செலவுக்கு வைத்திருந்த பணத்தை எடுத்து ரவி வீண் செலவு செய்ததாக தெரிகிறது. இதை மனைவி கண்டித்த நிலையில் கோபமடைந்த ரவி, வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரத்திற்குபின் தனது மனைவியின் செல்போன் நம்பரை தொடர்பு கொண்ட அவர், தான் கனகன் ஏரிக்கரை பகுதியில் நிற்பதாகவும், தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அங்கு சென்ற நிலையில், அதற்குள் ரவி அங்குள்ள ஒரு மரக்கிளையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ரவியின் உடலை பார்த்து கதறி அழுத உறவினர்கள் கோரிமேடு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.  ரவியின் உடலை எஸ்ஐ திருமுருகன் தலைமையிலான போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>