கிசான் திட்ட முறைகேடு போலி விவசாயிகளிடம் இருந்து ₹20.30 கோடி பறிமுதல் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்

கள்ளக்குறிச்சி, செப். 26: கிசான் திட்டத்தில் மத்திய அரசு மூலம் விவசாயிகளுக்கு நிதியுதவியாக ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்பட்டு வந்தது. அதில் விவசாயி அல்லாத போலி விவசாயிகள் பெயரில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் 2,36,864 பேர் போலி விவசாயிகள் பெயரில் முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி நகரத்தில் கருணாபுரம் பகுதியில் விவசாயிகள் அல்லாத 348 பேர் முறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா நேற்று கருணாபுரம் பகுதிக்கு சென்று களஆய்வு மேற்கொண்டார். முறைகேடுகளில் ஈடுபட்ட போலி விவசாயிகள் எத்தனை பேர், அவர்களிடமிருந்து இதுவரை வசூல் செய்யப்பட்ட தொகையின் விவரங்களை வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் ஆட்சியர் கூறுகையில், இதுவரை 66,864 போலி விவசாயிகளிடமிருந்து ரூ.20.30 கோடி பணம் வங்கி மூலம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,70,000 போலி விவசாயிகளிடமிருந்து பணம் பறிமுதல் செய்வதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த முறைகேடு மட்டுமில்லாமல் விழுப்புரம், சேலம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் போலி விவசாயிகள் பெயரில் ஏஜெண்டுகள் மூலமாக முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த வேளாண்மைத்துறை அதிகாரிகள் உடந்தையுடன் இந்த முறைகேடுகள் நடந்திருக்கலாம். கிசான் திட்டத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்களின் பெயர் பட்டியலை கொண்டு தொடர்ந்து பணம் பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்றார். கள்ளக்குறிச்சி வேளாண்மை இணை இயக்குநர் வேலாயுதம், வேளாண்மை துணை இயக்குநர் (வணிகம்) உலகம்மை முருககனி, வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) தேவி, வேளாண்மை அலுவலர் புஷ்பராணி, உதவி வேளாண்மை அலுவலர்கள் சுதா, ஞானபிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories:

>