விழுப்புரம் அருகே பரபரப்பு பள்ளி சிறுமி கத்திரிக்கோலால் குத்தி கொலை மாற்றுத்திறனாளி சிறுவன் வெறிச்செயல்

விழுப்புரம், செப். 26:  விழுப்புரம் அருகே சோழாபூண்டி திரவுபதி அம்மன் கோயில் ெதருவை சேர்ந்தவர் எம்ஜிஆர் பிரியன் (45). இவருக்கு சகுந்தலா என்பவருடன் திருமணமாகி பிரியதர்ஷினி (13), சரண்யா (10), பிரேம்குமார் (9), என மூன்று பிள்ளைகள் உள்ளனர். பிரியதர்ஷினி அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று அவருடைய பெற்றோர் நூறு நாள் வேலை திட்டத்திற்கு சென்றுள்ளனர். சரண்யா, பிரேம்குமார் ஆகிய இருவரும் விளையாடுவதற்காக வெளியே சென்றனர். மதியம் 2 மணியளவில் பிரியதர்ஷினி மட்டும் வீட்டில் தனியாக டிவி பார்த்து கொண்டிருந்தாள். அப்போது, அதே தெருவை சேர்ந்த 16 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் (வாய் பேச முடியாத மற்றும் காது கேளாதவர்) பிரியதர்ஷினி தனியாக இருப்பதை நோட்டமிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளான்.

அங்கிருந்த பிரியதர்ஷினியின் வாயை பொத்தி, பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான்.  அப்போது சிறுமி சத்தம் போட்டதால் மறைத்து வைத்திருந்த கத்திரிக்கோலால் பிரியதர்ஷினியின் வயிறு மற்றும் முதுகு பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளான்.

இந்நிலையில், சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வீட்டிற்கு வந்தனர். அப்போது பிரியதர்ஷினி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மற்றொருபுறம் மாற்றுத்திறனாளி சிறுவன் ரத்தக்கறை படிந்த கத்திரிக்கோலுடன் தப்ப முயன்றான். அதற்குள் அவனை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். இது குறித்து காணை காவல்நிலைத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது, பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த மாற்றுத்திறனாளி சிறுவனை போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில், அந்த சிறுவன் சென்னை அடையாறில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்துள்ளான். கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் வீட்டிலேயே இருந்துள்ளான்.

இந்நிலையில் எதிர்வீட்டில் இருந்த பிரியதர்ஷினியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளான். கடந்த ஒரு வாரமாக பிரியதர்ஷினியை நோட்டமிட்டுள்ளான். இந்நிலையில் நேற்று பிரியதர்ஷினி தனியாக இருப்பதை அறிந்து, வீட்டிற்கு சென்று பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான். அப்போது, பிரியதர்ஷினி மறுத்ததால் அவளை குத்தி கொலை செய்துவிட்டு தப்ப முயன்றபோது பொதுமக்களிடம் சிக்கிக் கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதற்கிடையே கொலை செய்யப்பட்ட சிறுமி உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விழுப்புரம் அருகே சிறுமியை கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கத்திரிக்கோல் கிடைத்தது எப்படி?மாற்றுத்திறனாளி சிறுவனின் தாயார், வீட்டிலேயே டைலர் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், சிறுவன் பிரியதர்ஷினி வீட்டிற்கு செல்வதற்கு முன் தனது தாயார் கடையிலிருந்து கத்திரிக்கோல் மற்றும் கையுறைகளை கொண்டு வந்துள்ளான். பிரியதர்ஷினி பலாத்காரத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் அந்த கத்திரிக்கோலால் கொலை செய்துவிட்டு தப்ப முயன்றபோது சிக்கியது தெரியவந்துள்ளது.

Related Stories:

>