விருத்தாசலம் அருகே சாலையில் சடலத்தை வைத்து உறவினர்கள் மறியல் போலீசார் பேச்சுவார்த்தை

விருத்தாசலம், செப். 26:      கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பரவளூரில் கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலின்போது வழக்கறிஞர் காந்தி, பூமாலை ஆகிய 2 பேர் தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவராக போட்டியிட்டனர்.  அதில் பூமாலை வெற்றி பெற்றார்.  பூமாலை தரப்பினருக்கும், காந்தி தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில்,  காந்தி தரப்பைச் சேர்ந்த சன்னியாசி(85) என்பவர் நேற்று உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்துள்ளார். இதனால் அவரின் இறுதி சடங்கு ஊர்வலம் தெரு வழியாக வந்தபோது அதே தெருவில் ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் தற்போது சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடந்து வந்துள்ளது.  இதனால் அந்த புதிய சாலை வழியே சடலத்தை எடுத்து வரக்கூடாது என பூமாலை தரப்பினர் கூறியுள்ளதாக தெரிகிறது. ஆனால் மீண்டும் அந்த சாலையின் மீது அவர்கள் சடலத்தை எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து பூமாலை தரப்பினர் அவர்களை கல்லாலும், கட்டையாலும் தாக்கி உள்ளனர். மேலும் செல்வம் மனைவி தமிழ்ச்செல்வி(42) என்பவரை கத்தியால் வெட்டியதில் தலையில் பலத்த காயம் அடைந்து மயங்கி விழுந்துள்ளார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த துக்க நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அனைவரும் அப்படியே சடலத்தை சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தகவலறிந்து வந்த விருத்தாசலம் டிஎஸ்பி ராமச்சந்திரன், மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் புஷ்பராஜ், பிரேம்குமார் உள்ளிட்ட போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்வதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு சடலத்தை எடுத்துக்கொண்டு சென்று சுடுகாட்டில் அடக்கம் செய்தனர்.  இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக ஊராட்சி மன்றத்தலைவர் பூமாலை உள்பட 16 பேர் மீது விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து பூமாலை உட்பட 9 பேரை  கைது செய்தனர்.

Related Stories:

>