நோய்வாய்பட்டு இறந்த மாட்டை கூறுபோட்டு விற்க முயற்சி

சின்னசேலம், மார்ச் 19: கச்சிராயபாளையம் அருகே மாதவச்சேரி சாலையில் மாட்டிறைச்சி விற்கும் கடை உள்ளது. இந்த கடையில் கச்சிராயபாளையத்தை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த சுக்கா வறுவல் வியாபாரிகள் வாங்கிச்சென்று வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த கடையில் சில நேரங்களில்  சுகாதாரமில்லாமல் மாட்டிறைச்சி விற்பனை செய்யப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றது. இதையடுத்து மாவட்ட சுகாதார மருத்துவ அலுவலரும் நேரடியாக வந்து விசாரணை நடத்தி சென்றுள்ளார்.

Advertising
Advertising

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 11 மணியளவில், இந்த கடையில் இறந்துபோன  மாட்டை கூறுபோட்டு கொண்டு இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகார் கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் ஸ்ரீகாந்துக்கு சென்றது. இதையடுத்து சப்கலெக்டர் கச்சிராயபாளையம் போலீசாருக்கு தகவல் சொல்லிவிட்டு இருசக்கர வாகனத்தில் சம்பவ இடத்திற்கு வந்தார். கச்சிராயபாளையம் சப்இன்ஸ்பெக்டர் குணசேகரன், தனிப்பிரிவு எஸ்ஐ ராசேந்திரன் மற்றும் கிராம உதவியாளர்களும் அங்கு வந்தனர்.

அப்போது அங்கிருந்தவர்களிடம் சப்-கலெக்டர் விசாரித்தார். அதில், அந்த கடையில் இருந்த மாடு நோய்வாய்பட்டு இறந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் முன்னிலையில் இறந்த மாட்டை கோமுகி ஆற்றங்கரையில் பள்ளம் தோண்டி புதைத்தனர். மேலும் சப்கலெக்டர் ஸ்ரீகாந்த் உத்தரவின்பேரில் கச்சிராயபாளையம் போலீசார் அந்த நபரை காவல் நிலையம் வரவழைத்து  இனிவரும் காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து அனுப்பினர்.

மேலும் இதுகுறித்து கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் வள்ளி, சப்இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஆகியோர் தொடர்விசாரணை  நடத்தி வருகின்றனர்.  புகார் வந்த உடன் துணிச்சலாக தனிநபராக சம்பவ இடத்திற்கு வந்து அதிரடி நடவடிக்கை எடுத்த சப்கலெக்டர் ஸ்ரீகாந்தை சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் பாராட்டினார்கள். மேலும் தூங்கிக் கொண்டு இருக்கும் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: