மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் அக்னி குளத்தில் மூழ்கி பக்தர் பரிதாப பலி

மேல்மலையனூர், மார்ச் 18: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் அக்னி குளத்தில் மூழ்கி கடந்த 3 நாட்களில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் இருந்து சற்று தொலைவில் சிறுதலைபூண்டி செல்லும் சாலையில் அக்னி குளம் அமைந்துள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் புனித நீராடி அம்மனை தரிசிப்பதற்காக இக்குளத்தில் குளிப்பது வழக்கம். இங்கு வரும் பக்தர்கள் பூஜை செய்த ஆடைகளை குளத்தில் வீசி விட்டு செல்கின்றனர். குளத்தின் ஆழம் தெரியாமல் குளத்துக்குள் நீராட செல்லும் பக்தர்கள் குளத்தில் உள்ள பழைய துணி கழிவு

களில் சிக்கி உயிரிழப்பது தொடர் கதையாக உள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன் இந்த குளத்தில் மூழ்கி ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை.

இந்நிலையில் நேற்று காலை மீண்டும் ஒரு பக்தர் குளத்தில் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் வளத்தி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், குளத்தில் மிதந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிந்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 3 நாட்களில் அக்னி குளத்தில் மூழ்கி 2 பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், அக்னி குளத்தில் கிடக்கும் பழைய துணிகளை அப்புறப்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும். பக்தர்கள் பாதுகாப்பாக குளிக்க கைப்பிடி சுவர் அமைத்து தடுப்பு கம்பி கட்ட வேண்டும். அவ்வாறு செய்தால் உயிரிழப்புகளை தடுக்க முடியும். எனவே கோயில் நிர்வாகமும் காவல்துறையும் ஒன்றிணைந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories:

>