கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பஸ் நிலையம், சூப்பர் மார்க்கெட், ஓட்டலில் ஆட்சியர், எஸ்பி ஆய்வு

கள்ளக்குறிச்சி, மார்ச் 18:    கள்ளக்குறிச்சியில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களான மந்தைவெளி, பஸ்நிலைய பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகள், ஓட்டல் ஆகியவற்றில் கள்ளக்குறிச்சி மாவட்ட  ஆட்சியர் கிரண்குராலா தலைமையில் எஸ்பி ஜெயச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் கொரோனா  வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து விழிப்புணர்வு  ஏற்படுத்தினர்.

அதாவது கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள்  பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் நுழைவுவாயில் கைப்பிடி, விற்பனை அங்காடி  பகுதி ஆகிய பகுதிகளில் கிருமிகளை தடுக்கும் விதமாக தொடர்ந்து லைசால் கரைசல்  மூலம் சுத்தம் செய்ய வேண்டும் என ஆட்சியர் கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில்  நிறுத்தப்பட்டிருந்த அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் நுழைவு வாயில் படிகள்  பகுதி மற்றும் ஓட்டுநர் மற்றும் பயணிகள் அமரும் பகுதியில் கிருமிகளை ஒழிக்க  முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாக நகராட்சி ஊழியர்கள் மூலம் லைசால் கரைசல் மருந்து தெளிக்கப்பட்டது.

பஸ் நிலைய பகுதியில் மக்கள்  கூட்டமாக கூட வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.  அப்போது உணவு பாதுகாப்பு தடுப்பு அலுவலர் கதிரவன், நகராட்சி துப்புரவு  ஆய்வாளர் செல்வகுமார், நகர கட்டமைப்பு ஆய்வாளர் தாமரைசெல்வன் மற்றும்  நகராட்சி ஊழியர்கள் உடன் இருந்தனர்.    

Related Stories: