இடைப்பாடி பகுதியில் நிலக்கடலை அறுவடை மும்முரம்

இடைப்பாடி, மார்ச் 18: இடைப்பாடி பகுதியில் நிலக்கடலை அறுவடை தொடங்கி முழுவீச்சில் நடந்து வரும் நிலையில், மகசூல் குறைந்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இடைப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 500 ஏக்கர் பரப்பில் நிலக்கடலை சாகுபடி செய்துள்ளனர். நடவின்போது நல்ல மழை பெய்ததால் பயிர் செழித்து வளர்ந்த நிலையில் தற்போது அறுவடை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால், செடிகள் நன்கு வளர்ந்த நிலையில் எதிர்பாரத்த அளவிற்கு காய்கள் பிடிக்கவில்லை. செடிகளில் குறைந்த எண்ணிக்கையிலேயே காய்கள் உள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இடைப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான இடைப்பாடி, செட்டிமாங்குறிச்சி, சிலுவம்பாளையம், முலப்புதூர், கல்வடங்கம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. செழித்து வளர்ந்த செடிகள் அறுவடைக்கு தயாராக உள்ளது. செடிகள் நன்கு வளர்ந்து மிக நீளமாக உள்ள நிலையில் அதிக காய்கள் பிடிக்காமல் குறைவாக உள்ளது. இதனால், எதிர்பார்த்த லாபம் கிடைப்பது கடினம் என்றனர்.

Related Stories: