கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஆலோசனை

ஈரோடு, மார்ச் 17: கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கி கொரோனா வைரஸ் பரவும் முறை குறித்தும், அதை எவ்வாறு தடுப்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பின்னர் கலெக்டர் கதிரவன் பேசியதாவது: அண்டை மாநிலங்களில் இருந்து பஸ் மற்றும் பிற வாகனங்கள் மூலம் மாவட்ட எல்லை வழியாக வரும் வாகனங்கள் மற்றும் பயணிகளை மாவட்ட எல்லை பகுதியிலேயே பரிசோதித்து நோய் தொற்று இருந்தால் உடனடியாக சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும். அனைத்து வாகனங்களும் லைசால் மூலம் அன்றாடம் சுத்தம் செய்து பயணிகளுக்கும் கைசுத்தம் பற்றியும், கொரோனா வைரஸ் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்ட எல்லைப்பகுதியான தாளவாடி, சத்தியமங்கலம், பர்கூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு முழுமையான சுகாதார பணிகள் மேற்கொள்ள வேண்டும். உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உணவகங்களில் முறையான தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படுகிறதா? என தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். மருத்துவர்கள் மருத்துவ உபகரணம் மற்றும் தேவையான அளவு மருந்துகளுடன் தயார்நிலையில் இருக்க வேண்டும். சுற்றுலா துறை அலுவலர்கள் ஆங்காங்கே விழிப்புணர்வு தட்டிகள் வைக்க வேண்டும். கொரோனா வைரஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: