ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட குளத்தை மீட்க கோரி ஊராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

தரங்கம்பாடி, மார்ச் 13: ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட குளத்தை மீட்டு பயன்பாட்டிற்கு தர கோரி காட்டுச்சேரி ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். நாகை மாவட்டம் காட்டுச்சோி ஊராட்சியில் சிவன் காலனி தெருவில் வசிக்கும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பூசகுளம் ஒரு சிலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. மக்கள் பயன்படுத்தாதவாறு வேலியை வைத்து அடைக்கப்பட்டுள்ளது. அந்த குளத்தை மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தரங்கம்பாடி தாசில்தாருக்கு கோரிக்கை அனுப்பி இருந்தனர்.

தாசில்தார் சமாதானம் கூட்டம் நடத்தி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதை தொடர்ந்து குடியரசு தினத்தன்று நடைபெற்ற கிராமசபை கூட்டத்திலும், தனிநபர்கள் வேலி வைத்து அடைத்துள்ள குளத்தை மீட்டு குளத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால் அப்பகுதி சிவன் காலனி மக்கள் ஊராட்சி அலுவலகத்தை கூடி முற்றுகையிட்டனர். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். பேச்சு வார்த்தையில் குளத்தை மீட்டு பொதுமக்கள் பயன்பாடுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: