சீவநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வணிகவியல், வேதியியல் ஆசிரியர் பணி இடம் 2 ஆண்டுகளாக காலி

தென்காசி, மார்ச் 11:  தென்காசியை அடுத்த சீவநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் இரண்டு வருடங்களாக தலைமையாசிரியர், வணிகவியல், வேதியியல் பாடங்களுக்கான ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் மாணவ-மாணவியர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் கல்வியாண்டிலாவது ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.  செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சீவநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி தரம் உயர்த்தப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகிறது. இந்த பள்ளியில் கணக்கப்பிள்ளை வலசை, சீவநல்லூர், அய்யாபுரம், அழகப்பபுரம்,  வேதம்புதூர், இலத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். உயர்நிலைப்பள்ளியாக இருந்த இப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக  தரம் உயர்த்தப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் இன்னமும் தலைமை ஆசிரியர் மற்றும் வணிகவியல், வேதியியல் பாடங்களுக்கு முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் மாணவ, மாணவியர் வணிகவியல் மற்றும் வேதியியல் பாடங்களை படிப்பதற்கு அங்கு பணியாற்றும் ஆசிரியர்களே தங்களது சொந்த செலவில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் ஆசிரியர்களை நியமித்து மாணவ, மாணவியருக்கு பாடம் நடத்த வேண்டிய சூழல் உள்ளது.

 கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக வேதியியல் மற்றும் வணிகவியல் பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாத நிலையிலேயே மாணவ, மாணவியரும் தற்போது தேர்வுகளை எழுதி வருவது குறிப்பிடத்தக்கது.  மேலும் பள்ளி அலுவலகத்திற்கு இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.  இரவு காவலர் இல்லாத காரணத்தால் பள்ளி வளாகத்தில் இரவு நேரங்களில் பல்வேறு அசம்பாவித சம்பவங்களும் நடைபெறுவதாக புகார்கள் உள்ளது.  

 பள்ளியில் உள்ள கணினி அறையின் பூட்டை உடைத்து கணினிகளை திருட முயன்ற சம்பவம் அங்கு உள்ள சிசிடிவி காமிராவில் பதிவாகி உள்ளது.  இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  மேலும் சத்துணவு அமைப்பாளர், சமையலர் உதவியாளர் பணியிடங்களும் நிரப்பப்படவில்லை.  முற்றிலும் கிராமப்பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் இந்த பள்ளியில் கல்வி பயின்று வரும் நிலையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படாத காரணத்தினால் மாணவ, மாணவியரின் கல்வி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

இது குறித்து செங்கோட்டை ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் மற்றும் பள்ளி கல்வி வளர்ச்சி மற்றும் மேலாண்மை குழு தலைவர் சட்டநாதன் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிக்கு தேவையான ஆசிரியர் பணியிடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருவதுடன் கூடுதல் வகுப்பறைகள் கட்டிக்கொடுக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். வரும் கல்வியாண்டிலாவது தலைமையாசிரியர் மற்றும் வேதியியல், வணிகவியல் ஆசிரியர்கள் உள்ளிட்ட அலுவலக காலி பணி இடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கைகளை கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று பெற்றோர் விரும்புகின்றனர். அத்துடன் வகுப்பறை கட்டிடங்களும் போதுமானதாக இல்லை. இதனால் மொழிப்பாடங்கள் உள்ளிட்ட ஒரு சில வகுப்புகளை ஒரே வகுப்பறையில் நடத்த வேண்டிய சூழல் உள்ளது எனவே கிராமத்தை சேர்ந்த மாணவ, மாணவியரின் கல்வி அவசியத்தை கருத்தில் கொண்டு சீவநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தேவையான கட்டிடங்கள் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் அலுவலக காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: