சிவகங்கை, மார்ச் 10: சிவகங்கை மாவட்டத்தில் சீமைக்கருவேல மர ஒழிப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 445 ஊராட்சிகளிலும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கிராமப்புறங்களில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான இடங்கள், கண்மாய்கள், தரிசு நிலங்கள் என கிராமப்புறங்களை சுற்றியுள்ள இடங்களில் சீமைக்கருவேல மரங்கள் அதிகம் காணப்படுகிறது. கடந்த 2016ம் ஆண்டு இறுதியில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசுக்கு சொந்தமான இடங்கள், கண்மாய்களில் உள்ள இம்மரங்களை அகற்றும் பணியும் நடந்தது. சிவகங்கை மாவட்டத்தில் மிகக்குறைவான அளவிலேயே இம்மரங்களை அகற்றும் பணி நடந்தது.சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதில் இம்மாவட்டத்தில் டெண்டர் விடுவதில் பல்வேறு முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் சீமைக்கருவேல மரம் அகற்றும் பணி நடந்ததால், இந்த விறகுகளுக்கு முன்பு போல் விலை கிடைக்கவில்லை. மரங்களை அகற்ற போதிய வேலையாட்களும் இல்லை. இதனால் டெண்டர் எடுத்தவர்கள் மரங்களை வெட்டாமல் இருந்தனர். தனியாரும் அவர்களது இடங்களில் மரங்களை அகற்றவில்லை.
அரசு இடங்களில் உள்ள மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கவில்லை. சிவகங்கை மாவட்டத்தில் சுமார் 5 சதவீதத்திற்கும் குறைவான அளவிலேயே இம்மரங்களை அகற்றும் பணி நடந்தது. தொடர்ந்து இம்மரங்களை அகற்ற நடவடிக்கை இல்லாமல் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.