கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் கட்டாய வசூல் வேட்டை

கள்ளக்குறிச்சி, மார்ச் 6:  கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம், கச்சிராயபாளையம், சங்கராபுரம், ரிஷிவந்தியம் உள்ளிட்ட பகுதியில் இருந்து தினமும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இதில் பெரும்பாலானோர் கிராம பகுதியை சேர்ந்த ஏழை, எளிய மக்கள் தான் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்து செல்கின்றனர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் சீனியர் செவிலியர்கள் சுமார் 7 பேர் தினமும் காலையில் மருத்துவமனைக்கு வந்ததும், குழந்தை வார்டு பகுதிக்கு சென்று இன்று பிரசவம் ஏதாவது நடந்துள்ளதா என்று பார்த்துவிட்டு, அங்கு பிரசவம் நடந்திருந்தால் ஆண் குழந்தை பிறந்த குடும்பத்தினரிடம் ரூ.4000ம் பணம், பெண் குழந்தை பிறந்த குடும்பத்தினரிடம் ரூ.3000 பணம் என கட்டாயப்படுத்தி வசூல் செய்து வருகின்றனர்.

இதனை சீனியர் செவிலியர்கள் சரிபாகமாக பிரித்துக்கொண்டு மருத்துவமனையில் எந்த ஒரு பணியிலும் ஈடுபடாமல் மருத்துவமனையில் ஓய்வு எடுத்துக்கொண்டு 8 மணி நேரம் முடிந்ததும் வீட்டுக்கு சென்று விடுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுக்களை வைத்துள்ளனர். பிரசவ வார்டு பகுதியில் குழந்தை பெற்ற தாய்மார்கள் செவிலியர் கேட்ட பணத்தை கொடுக்கவில்லை என்றால் சரிவர சிகிச்சை அளிப்பது இல்லை எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பெண்கள் வார்டு பகுதியில் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுடன் பாதுகாவலர் யாரையும் அனுமதிப்பது இல்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என்பதனையும் தெரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. நோயாளிகளுக்கு ஒரு முறை குளுக்கோஸ் ஏற்றுவதற்கு கட்டாயமாக ரூ.100 வசூல் செய்து கொண்டுதான் குளுக்கோஸ் ஏற்றப்படுகிறது. பணம் கொடுக்கவில்லை என்றால் மருத்துவ பணியே பார்ப்பது இல்லை. இதனால் ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த பெண்கள் அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை பெற முடியாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து பெண்கள் வார்டு பகுதியில் சிகிச்சைக்கும் குழந்தை பிறப்புக்கும் கட்டாய வசூல் வேட்டையில் ஈடுபடும் செவிலியர்கள் மீது மாவட்ட ஆட்சியர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: