ஊட்டியில் கோடை விழா அறிவிப்பு எப்போது?

ஊட்டி, மார்ச் 4:  ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா நடத்துவது தொடர்பான முதற்கட்ட ஆலோசனை கூட்டம் நடத்தப்படாத நிலையில், விழா நடக்கும் தேதி அறிவிப்பிப்பை அரசு மற்றும் தனியார் துறைகள் எதிர்பார்த்து காத்துள்ளன. கோடை விடுமுறையின் போது ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பல்வேறு நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலைத்துறை, சுற்றுலாத்துறை மூலம் நடத்தப்படுகிறது. ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்–்சியும், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி, கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி, கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி நடத்தப்படுகிறது. சுற்றுலாத்துறை மூலம் படகு போட்டி, படகு அலங்கார போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

மேலும், தனியார் சார்பில் குதிரை பந்தயம், நாய்கள் கண்காட்சி, ஓவிய கண்காட்சி போன்றவைகளும் நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சிகளையும், விழாக்களையும் காண குவியும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் இதர துறைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.  வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் மார்ச் மாதமே விழா மற்றும் கண்காட்சி நடத்தப்படும் தேதிகள் அறிவிக்கப்படும். இதற்கான ஆயத்த கூட்டம் பிப்ரவரி மாதம் இறுதியில் நடத்தப்படும். ஆனால், இம்முறை இதுவரை நடத்தப்படாமல் உள்ளது. பொதுவாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கலந்துக் கொள்ளும் கூட்டம் நடந்து முடிந்தவுடன், அந்தந்த துறைகள் தங்களுக்கான பணிகளை முன்னெடுத்து நடத்துவார்கள்.

மேலும், மலர் கண்காட்சி மற்றும் இதர கண்காட்சிகள் நடத்தும் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே தனியார் துறையில் நடத்தப்படும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளும் செய்வார்கள். இதனால், மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா நடத்துவது தொடர்பான அறிவிப்பிற்காக அனைத்துத்துறை அதிகாரிகள் மற்றும் தனியார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்த்து உள்ளனர். மேலும், வெளியூர் மக்களும் ஊட்டி வர திட்டமிடவும், ரயில் மற்றும் பேருந்து முன் பதிவு செய்யவும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Related Stories: