உடைந்து கிடக்கும் எம்.திருக்கனூர் ஏரி மதகு

மரக்காணம், மார்ச் 3: மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்டது எம்.திருக்கனூர் கிராமம். இந்த கிராமத்தைச் சுற்றிலும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள் ஆவர். இவர்கள் இப்பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஆண்டுதோறும் மணிலா, தர்பூசணி, மரவள்ளி, நெல், கேழ்வரகு, கரும்பு போன்ற பயிர்களை நடவு செய்கின்றனர்.

இதுபோல் நடவு செய்ய இங்குள்ள ஏரியின் தண்ணீரையே விவசாயிகள் நம்பியுள்ளனர். ஆனால் தற்போது இந்த ஏரியின் நீர் பிடிப்பு பகுதியை ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்து அந்த இடத்தில் விவசாய பயிர் செய்து வருகின்றனர். மேலும் ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தில் இருந்து மணல் கொள்ளையும் நடந்து வருவதாக அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் குறை கூறுகின்றனர். இந்த பகுதியில் உள்ள ஏரி மழைக்காலத்தில் மட்டுமே தண்ணீர் நிரம்பும் நிலையில் உள்ளது. ஆனால் மழைக்காலத்தில் தண்ணீர் நிரம்பி ஏரி முழுகொள்ளளவை எட்டினால் அந்த தண்ணீர் வடிய குறைந்தது 6 மாதத்திற்கு மேலாகிவிடும். இதனால் இந்த ஏரியில் மணல் திருட முடியாது. இதன் காரணமாக ஏரியை ஆக்கிரமிப்பு செய்துள்ள ஒரு சிலர் மழைக்காலத்தில் ஏரியில் தண்ணீர் நிரம்பும்போது ஏரிக்கரையை சேதப்படுத்துதல் மற்றும் ஏரியின் மதகு பகுதியை உடைத்து விடுதல் போன்ற சமூகவிரோத செயல்களில் ஈடுவடுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

இதுபோல் கடந்த ஆண்டு பெய்த பருவ மழையின்போது இந்த ஏரி முழு கொள்ளளவு நிரம்பியுள்ளது. அப்போது இந்த ஏரியின் மதகு பகுதி உடைந்தது. இதனால் ஏரியில் இருந்த தண்ணீர் பக்கிங்காம் கால் வாய் வழியாக கடலுக்கு சென்றுவிட்டது. எனவே உடைந்துபோன மதகு பகுதியை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை புகார் மனு கொத்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் இதுவரையில் உடைந்துபோன ஏரியின் மதகு பகுதியை சரிசெய்யவில்லை. எனவே இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி உடைந்துபோன எம்.திருக்கனூர் ஏரியின் மதகு பகுதியை உடனடியாக சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: