அவலாஞ்சி பகுதிகளில் முதன்மை செயலாளர் ஆய்வு

ஊட்டி, மார்ச் 1: நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த கனமழையின் போது பாதிக்கப்பட்ட பகுதிகளை மற்றும் சீரமைப்பு பணிகள் நடந்து வரும் பகுதிகளை தமிழக முதன்மை செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெய்த மழையின் போது, எம்.பாலாடா பகுதியில் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கின. மேலும், அங்குள்ள நீரோடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சாலையோரத்தில் தடுப்பு சுவர்கள் இடிந்து விழுந்தன. மேலும், ஏமரால்டு மற்றும் இத்தலார் போன்ற பகுதகிளிலும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பாலாடா பகுதிகளையும், துளிதலை சந்திப்பு பகுதியில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் தடுப்புச்சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது. எமரால்டு பகுதியில் அணையிலிருந்து இருந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றும் போது, குடியிருப்பு பகுதிகளில் பாதிப்பு ஏற்படாதவாறு தடுப்புச்சுவர் கட்டப்பட்டு வருகிறது. அவலாஞ்சி சாலையில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகளை தமிழக முதன்மை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார். அவலாஞ்சி மின் நிலையம் பகுதியில் ஏற்பட்ட மண் சரிவை பார்வையிட்டார். தொடர்ந்து குந்தா தாலூகாவிற்குட்பட்ட புதிய அட்டுபாயில் கிராமத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 25 பயனாளிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1000 பெறுவதற்கான ஆணை, 15 பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை ரூ.43,500த்திற்கான காசோலையை வழங்கினார்.

மேலும், 10 பயனாளிகளுக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.2,02,500த்திற்கான காசோலையினையும், ஆக மொத்தம் 50 பயனாளிகளுக்கு ரூ.2,71,250 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 தொடர்ந்து இத்தலார் ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் பகுதியில் ரூ.1.02 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் 120 தற்காலிக வெள்ள பாதுகாப்பு மைய கட்டிடங்களையும் நேரில் பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா, மாவட்ட வன அலுவலர் குருசாமி தபேலா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கெட்சி லீமா அமாலினி, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் விஸ்வநாதன், ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், குந்தா வட்டாட்சியர் சரவணன், ஊட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ்கிருஷ்ணன், சந்திரசேகரன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: