×

மதுரையிலிருந்து ஆர்.எஸ்.மங்கலத்திற்கு கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் பொதுமக்கள், வியாபாரிகள் வலியுறுத்தல்

ஆர்.எஸ்.மங்கலம், ஜன. 27: மதுரையிலிருந்து ஆர்.எஸ்.மங்கலத்திற்கு கூடுதலாக அரசு பேருந்துகள் இயக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் எட்டாக்கனியாகவே உள்ளது. நீண்ட நாள் கோரிக்கைக்கு எப்போது விடிவு காலம் வருமோ என பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பெரும் எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர். மாவட்டத்தில் வளர்ந்துவரும் நகரங்களில் ஆர்.எஸ்.மங்கலம் முக்கிய நகரமாகும். தற்போது  தாலுகா தலைநகராக விளங்கி வருகின்றது. இந்த ஊரைச் சுற்றிலும் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.    தமிழகத்திலேயே அதிகமான மிளகாய் விளையக்கூடிய பகுதி இப்பகுதியாகும். இங்கு வாரம் தோறும் சனிக்கிழமையன்று வாரச்சந்தை நடைபெறும். இந்த சந்தை மிளகாய் சந்தைகளில் மிகவும் பிரசித்தி பெற்றது. இதற்கு மதுரை விருதுநகர், சாத்தூர், சிவகாசி,  போன்ற பகுதிகளில் இருந்து மிளகாய் வியாபாரிகள் வருகின்றனர். இங்கிருந்து மிளகாய்களை வாங்கி செல்கின்றனர்.

இதேபோல் இங்கு நடைபெறும் சனிக்கிழமை சந்தை மற்றும் மார்க்கெட்டிற்கு பெரும்பாலும் மதுரையில் இருந்துதான் காய்கறி, மளிகை, ஹார்டுவேர்ஸ் மற்றும் வீட்டுக்கு தேவையான பெரும்பாலான அத்தனை பொருட்களும் வருகின்றது. ஆனால் மதுரையில் இருந்து ஆர்.எஸ்.மங்கலத்திற்கு ஒரு சில பஸ்கள் மட்டுமே வருகின்றது. குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ் இருப்பதில்லை. இங்கிருந்து மதுரை செல்ல வேண்டும் என்றால் ராமநாதபுரம் சென்று அங்கிருந்து பரமக்குடி வழியாக செல்ல வேண்டும். இல்லை எனில் திருவாடானை, காளையார்கோவில் சிவகங்கை வழியாக செல்ல வேண்டி உள்ளது. இதனால் பண விரையம் மட்டுமின்றி நேர விரையமும் ஏற்படுகின்றது. ஆகையால் மதுரை, மானாமதுரை, இளையான்குடி, சாலைக் கிராமம் வழியாக மதுரை-ஆர்.எஸ்.மங்கலம் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். அவ்வாறு இயக்கினால் இப்பகுதி மக்களுக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பொதுமக்களின் நலன் கருதி கூடுதல் பஸ்களை இயக்க சம்மந்தப்பட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.

Tags : Madurai ,RS Mangalam ,
× RELATED மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி