×

ஜனநாயக ரீதியில் போராடும் மக்களை அடக்கு முறையால் ஒடுக்க நினைப்பது ஆபத்தானது முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் அறிக்கை

பரமக்குடி, பிப். 28: இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராடும் மக்கள் மீது காவல்துறை அடக்குமுறையை கொண்டு ஒடுக்க நினைப்பது ஆபத்தானது என முஸ்லிம் ஐக்கிய ஜமாத் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் பொதுச் செயலாளர் ஏ.ஜெய்னுல் ஆலம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்கள் மீது காவல்துறை நடத்திய தடியடி மிகவும் கண்டிக்கத்தக்கது.ஜனநாயக ரீதியில் போராடுகின்ற மக்களை காவல்துறை அடக்கு முறையைக் கொண்டு ஒடுக்க நினைப்பது ஆபத்தானது. காவல்துறை கண்மூடித்தனமாக மக்கள் மீது நடத்திய தாக்குதல் ஜனநாயகத்தை நேசிக்கும் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. ஜனநாயக நாட்டில் மக்கள் தங்களது உரிமைகளுக்காக ஜனநாயக வழியில் போராடுவதற்கு அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமையாகும். இந்த உரிமையை பறிப்பதற்கு தமிழக அரசும் காவல் துறையும் செயல்படுவது கண்டனத்திற்குரியது.தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் இந்தியாவிற்கு முன்மாதிரியாக திகழக் கூடியது. மக்கள் தங்களுடைய ஒற்றுமையின் மூலம் எத்தகைய கருப்பு சட்டங்களையும் எதிர்த்து வென்ற வரலாறு தமிழ்நாட்டிற்கு உண்டு. தமிழ்நாட்டில் வெறுப்பு அரசியல் என்றைக்கும் வெற்றி பெற்றது கிடையாது. தன்னெழுச்சியான மக்களின் போராட்டங்களை திசை திருப்பும் வகையில் திட்டமிட்டு ஒரு சிலர் செய்கின்ற சதிக்கு தமிழக அரசும் காவல்துறையும் துணை போகக்கூடாது என்று ஐக்கிய ஜமாஅத் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை