‘பாஸ்டேக்’ அமலால் காத்திருக்கும் வாகனங்கள் நாங்குநேரி சுங்கச்சாவடியில் ரொக்கம் செலுத்த கூடுதல் கவுன்டர் மத்திய அமைச்சரிடம் ஞானதிரவியம் எம்பி வலியுறுத்தல்

நெல்லை, பிப். 26: நாங்குநேரி சுங்கச்சாவடியில் ரொக்கம் செலுத்தி செல்லும் வாகனங்களுக்கு இரண்டு கவுன்டர் திறக்க வேண்டும் என ஞானதிரவியம் எம்பி வலியுறுத்தியுள்ளார்.மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியை நெல்லை தொகுதி எம்பி ஞானதிரவியம் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:    நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் என்ற விரைவு வில்லை முறை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதன் செயல்பாடுகளில் உள்ள குறைகளால், மக்களுக்கு இழப்புகள் ஏற்படுகிறது.  நாங்குநேரி சுங்கச் சாவடியிலும் இந்த விரைவு வில்லை முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பான்மையான வாகனங்கள் இந்த கட்டண முறைக்கு இன்னும் மாறவில்லை. அதனால்  ரொக்கம் செலுத்தி செல்லும் வசதி தற்போது இருந்தாலும், இந்த முறையில் செல்லும் வாகனங்களுக்கு ஒரே ஒரு வழி மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இதனால் இந்த வழியில்  வாகனங்கள் அதிக நேரம் காத்திருந்து அவதிப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே பெரும்பான்மையான வாகனங்கள் விரைவு கட்டண முறைக்கு மாறும் வரை இருக்கிற ஆறு வழிகளில் குறைந்தபட்சம் இரண்டு வழியாவது இந்த வகை வாகனங்களுக்கு ஒதுக்க வேண்டும். மேலும் ரொக்கம் செலுத்தி செல்லும் வாகனங்களுக்கு `இரு வழி பயணத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படாமல் இரண்டு முறையும் முழு கட்டணம் வசூலிப்பதால் பயணிகளுக்கு பெரிய இழப்பு ஏற்படுகிறது. எனவே முன்பு போலவே இரு வழிப் பயணத்திற்கு கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் விரைவு கட்டண முறை அமல் செய்யப்பட்ட பிறகு, நாடெங்கும் சுங்கச்சாவடிகளில் இருபுறமும் 100மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டிருந்த வேகத்தடைகள் எல்லாம் அகற்றப்பட்டு சாலைகள் சீரமைக்கப்பட்டு சீரான பயணத்திற்கு வழி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் நாங்குநேரி டோல்கேட்டில் இன்னமும் இருபுற சாலைகளும் வேகத்தடைகள் மற்றும் குண்டும் குழியுமாகவே உள்ளது. எனவே இந்த சுங்கச்சாவடி அணுகு சாலைகளில்  உடனே வேகத்தடைகள் அகற்றப்பட்டு சாலைகள் தரமான முறையில் சீரமைத்து வாகனங்கள் விரைவாக கடந்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.தானியங்கி கருவிநாடு முழுவதும் சாலைகளை விரைவுச்சாலை,  நாற்கரச் சாலை போன்று தரம் பிரித்து  அதில் வாகனங்கள் செல்ல வேண்டிய  வேகத்தை சாலை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. வாகன ஓட்டிகள் வேகக்  கட்டுப்பாட்டை கடைப்பிடிக்காததும், சாலை விதிகளை மீறுவதுமே  விபத்துக்களுக்கு முக்கிய காரணம். எனவே வாகனங்கள் செல்ல வேண்டிய  வேகத்தை  அறிவித்ததோடு நின்று விடாமல், கடைப்பிடிக்கப்படுகிறதா, சாலை விதிகள்  மீறப்படுகிறதா என்பதை கண்காணித்து நடிவடிக்கை எடுக்க, மேலை நாடுகளில்  உள்ளது போல தானியங்கி கருவிகளை விரைவுச்சாலை மற்றும் நாற்கரச்சாலைகளில் உடனே பொருத்தி மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஞானதிரவியம் மனுவில் தெரிவித்துள்ளார்.

Related Stories: