மனு அளித்த உடனே மாற்றுத்திறனாளிக்கு காதொலி கருவி வழங்கிய ஆட்சியர்

விழுப்புரம், பிப். 25: மனு அளித்த உடனே மாற்றுத்திறனாளிக்கு ஆட்சியர் அண்ணாதுரை உதவிக்கரம் நீட்டினார்.விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைகேட்புக்கூட்டம் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் வீட்டு மனைப்பட்டா, உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளிக்க வந்தனர். அதேபோல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வங்கிக்கடன், உபகரணங்கள் கேட்டு நேற்று ஆட்சியர் அலுவலகத்தின் தரைதளத்தில் காத்திருந்தனர். உடனடியாக அங்கு வந்த ஆட்சியர் அண்ணாதுரை, அவர்களின் மனுக்களை பெற்று உடனடியாக தீர்வுகாண உத்தரவிட்டார். மேலும், கண்டாச்சிபுரம் அருகே தேவனூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (காதுகேட்காத மாற்றுத்திறனாளி) தனக்கு காதொலிகருவிகள் வழங்கக்கோரி மனு அளித்தார். மனுவைபெற்ற ஆட்சியர், அருகிலிருந்த மாற்றுத்திறனாளி அலுவலரை அழைத்து, தனது அலுவலகத்திலிருந்து அக்கருவியை கொண்டுவர உத்தரவிட்டார். மனு கொடுத்த சில நிமிடங்களில் அந்த முதியவருக்கு காதொலி கருவிகளை காதில் பொருத்தி அனுப்பி வைத்தார். ஆட்சியரின் இந்த நடவடிக்கை அங்கிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

Related Stories: